வங்கதேசத்தில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி மர்ம மரணம்.. இன்னொரு அதிகாரி இரவோடு இரவாக ஓட்டம்.. இதுவரை 17 அதிகாரிகள் கொல்லப்பட்டார்களா? வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?

வங்கதேசத்தில் அமெரிக்க சிறப்புப் படைகளின் ஏஜென்ட் ஒருவரின் மர்ம மரணம் மற்றும் அதை தொடர்ந்து மற்றொரு அமெரிக்க ஒப்பந்ததாரர் அவசரமாக வெளியேறியது குறித்து மிகவும் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 31…

bangladesh

வங்கதேசத்தில் அமெரிக்க சிறப்புப் படைகளின் ஏஜென்ட் ஒருவரின் மர்ம மரணம் மற்றும் அதை தொடர்ந்து மற்றொரு அமெரிக்க ஒப்பந்ததாரர் அவசரமாக வெளியேறியது குறித்து மிகவும் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று, அமெரிக்க சிறப்பு படைகளின் ஏஜென்ட் ஆன டெர்ரென்ஸ் எட்வல் ஜாக்சன் என்பவர், மேற்கு டாக்காவில் உள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அதேபோல், மகாவா குளோபல் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தை சேர்ந்த அமெரிக்க ஒப்பந்ததாரரான ரிச்சர்ட் டானியல் ரோமன் செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த மரண செய்தி கிடைத்தவுடன், உடனடியாக ஒரே இரவில் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இவர்கள் இருவரும் அமெரிக்காவின் வெளியுறவு துறையின் பயங்கரவாத எதிர்ப்பு உதவி கட்டமைப்பின் கீழ் வங்கதேசத்தின் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

பகிரங்கமாக, இவர்கள் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால், உண்மையில் அமெரிக்கர்கள் இந்த பகுதியில் தங்கள் பிடியை நிலைநிறுத்தவும், போதைப்பொருள் வழிகளை திசை திருப்பவும் முயற்சித்திருக்கலாம் என்று தெரிகிறது.

மகாவா குளோபல் போன்ற நிறுவனங்கள், அமெரிக்க சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு படைகளின் ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள அதிகாரிகள் போலி அடையாள அட்டைகளுடன் இரகசியமாக இயங்க அனுமதிக்கும் “கட் அவுட் ஃபர்ம்ஸ்” எனப்படும் இடைத்தரகு நிறுவனங்களாக செயல்படுகின்றன.

இவர்கள் அப்பகுதியின் புவியியல் தகவல், அசைவுகள், சீனர்கள், துருக்கியர்கள், ரஷ்யர்கள், இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் இருப்பு போன்ற உளவு தகவல்களை திரட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளனர்.

ரோமன் வெளியேறியபோது, அமெரிக்க திட்டத்தின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால் தான் வெளியேறியதாக காரணம் கூறினார். ஆனால், அவர் ஹோட்டலில் பணமாக செலுத்திவிட்டு, எந்தக் கடன் அட்டைகளையும் பயன்படுத்தாமல், முதல் விமானத்திலேயே சிங்கப்பூர் சென்றது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வங்கதேசப் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கை அம்பலமானதா? அல்லது அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதா? என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. ஒரு அதிகாரி உயிரிழக்கும்போது, முழு அணியையும் அங்கிருந்து விலக்கி, புதிய அணியை நிறுவுவது உளவுத்துறை நடைமுறை. ரோமன் அவசரமாக புறப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது, ஒரு தொடர் சங்கிலியை துண்டிக்க அவர்கள் விரும்பியது தெளிவாகிறது.

சமீபத்தில் வங்கதேசத்தில் 17 வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு வங்கதேச யூபர் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களில் ஐந்து அமெரிக்கர்கள், ஐந்து துருக்கியர்கள் மற்றும் ஏழு பாகிஸ்தானியர்கள் அடங்குவர் என்றும் அவர் கூறியுள்ளார். இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும், இது உண்மையாக இருந்தால், வங்கதேசத்தில் உளவு நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் மோதலின் தீவிரத்தை உணர்த்துகிறது.

இந்த சூழல், வங்கதேசத்தில் நிலைமை சீராக இல்லை என்பதையும், வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் ஆதிக்கம் நாட்டை மேலும் சிக்கலில் ஆழ்த்துகிறது என்பதையும் காட்டுகிறது.