பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை போராட்டங்கள் வெடித்து ஒரு சில வாரங்களே ஆன நிலையில், தற்போது கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்தி இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மற்றொரு அலை போராட்டம் அப்பகுதியை உலுக்கி வருகிறது.
ஆரம்பத்தில் கட்டண உயர்வு மற்றும் தேர்வு மதிப்பீட்டு முறையில் உள்ள குறைபாடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கிய இந்த போராட்டம், இப்போது ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசுக்கு எதிரான பெரிய கிளர்ச்சியாக மாறியுள்ளது. இது அப்பகுதியின் இளைஞர்களிடையே (Gen Z) நிலவும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
முசாஃபராபாத்தில் உள்ள ஒரு முன்னணி பல்கலைக்கழகத்தில் இந்த போராட்டம் தொடங்கியது. கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்கலைக்கழகங்களில் சிறந்த வசதிகள் கோரியும் மாணவர்கள் இந்த போராட்டத்தை தொடங்கினர். போராட்டம் வேகமெடுக்கவே, பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக வளாகத்திற்குள் அரசியல் நடவடிக்கைகளுக்கு தடை விதித்தது.
அமைதியான ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இது, கல்வி முறை மற்றும் மோசமான உள்கட்டமைப்புக்கு எதிராகவும், இறுதியில் ஷெபாஸ் ஷெரீஃப் அரசுக்கு எதிராகவும் திரும்பியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்கும்போதெல்லாம், அடக்குமுறையே அரசின் பதிலடியாக உள்ளது. கூட்டாட்சி அரசு மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைமையிலான மாநில அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையிலான மத்திய அரசும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த போராட்டங்களை ஒடுக்க மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதுடன், துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கல்வி முறையில் உள்ள கட்டணங்கள், உள்கட்டமைப்பு செலவுகள் மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகள் ஆகியவை இளைஞர்களின் நலனுக்காக இல்லாமல், அதிகாரிகளுக்கு பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகவே மாறிவிட்டது என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசு, பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கவிழும் நிலையில் உள்ளபோதும், அதன் அடக்குமுறைகள் குறையவில்லை என்றும், எந்தவொரு தவறுக்கும் குரல் கொடுக்கும் மக்கள் மீது அட்டூழியங்கள் இழைக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முன்னதாக நடைபெற்ற வன்முறை ஆர்ப்பாட்டங்களின் தொடர்ச்சியாகவே இது பார்க்கப்படுகிறது. மாணவர்கள் நடத்திய அமைதி போராட்டத்தை அரசு வன்முறையால் எதிர்கொண்டது, அப்பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
வங்கதேசம் போல் இந்த போராட்டம் வெடித்தால் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு தப்பித்து ஓடும் நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் சேர்த்துவிடுங்கள், நாங்கள் இந்தியராக அமைதியாக, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறோம் என்று கோஷம் எழுப்பி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
