இந்தியா சுதந்திரம் அடைந்து உலகின் வளர்ந்த பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள நிலையில், பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் ஆட்சிமுறை குறித்து அந்நாட்டு மக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் நிலவும் ஆதங்கமும் ஒப்பீட்டு பார்வைகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பொதுமக்களிடம் ஒரு யூடியூப் சேனல் கருத்துக்களை கேட்டபோது, இந்தக் கருத்துகளில், நாட்டின் தற்போதைய பரிதாபகரமான நிலை குறித்து பொதுமக்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தியா சுதந்திரமடைந்தார்கள், உயர்ந்தார்கள், நாமும் சுதந்திரம் அடைந்தோம், ஆனால் அழிந்து போனோம்” என்ற கூற்று, இந்தியாவின் மகத்தான வளர்ச்சிக்கு நேர்மாறாக பாகிஸ்தான் பின்னுக்கு தள்ளப்பட்டதை குறிக்கிறது.
ஒரு பொதுஜனம் இந்தியா சந்திரனில் உள்ளனர்; நாங்கள் சாலையில் பிச்சை எடுக்க கிண்ணத்துடன் நிற்கிறோம். எங்களுக்கு கிண்ணத்தைக் கொடுத்து விடுங்கள், நாங்கள் பிச்சை கேட்க தயாராக இருக்கிறோம். நிலைமை அப்படித்தான் இருக்கிறது” என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார். மேலும், “நாங்கள் படிக்க முடியாத அளவிற்கு எங்கள் அரசாங்கம் செயல்படுகிறது” என்றும், கல்வியின்மை நிலவுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தியா இன்று ‘உலகின் மருந்தகம்’ என அழைக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப மையமாகவும், ஆசியாவின் சிலிகான் பள்ளத்தாக்காகவும் திகழ்கிறது. இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் மற்றும் மூன்றாவது பெரிய வாகன தொழில் நாடாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் விண்வெளி அமைப்பான இஸ்ரோ, நாசாவுடன் இணைந்து செயல்படும் அளவிற்கு உயர்ந்துள்ளது. வாங்கும் திறன் சமநிலையில் இந்தியாவின் பொருளாதாரம் $17.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் வலுவாக உள்ளது.
இந்தியா வேகமாக முன்னேறி வரும் நிலையில், பாகிஸ்தான் தேக்க நிலையில் இருப்பதற்கு காரணம் அதன் அடிப்படை பிரச்சினைகளே என்று பொதுமக்கள் உறுதியாக கூறுகின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான ஜனநாயக உரிமையும் நீதி அமைப்பும் சரியாக இல்லாததே முதன்மை பிரச்சனை. இது சரிசெய்யப்படாவிட்டால், ஜிடிபி போன்ற பொருளாதார வளர்ச்சிகள் பற்றிப் பேசுவது வீண்.
நீதி அமைப்பு சீர்குலையும்போது, நாட்டின் செல்வம் ஒரு சிலரின் கைகளில் மட்டுமே குவிகிறது. இதனால் சாதாரண மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டு, சந்தை மற்றும் பொருளாதாரம் வளர வழியில்லை. 1993-ல் பாகிஸ்தானுக்கு இருந்த அதே நிலையில்தான் இந்தியாவும் இருந்தது. ஆனால், இந்தியா தனது நீதி அமைப்பை சீரமைத்ததால் இன்று பொருளாதார வல்லரசாக உள்ளது. சீனா கூட ஆரம்பத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, அடிப்படை பிரச்சினைகளை தீர்த்த பிறகே பொருளாதார வளர்ச்சியை அடைந்தது.
“யமஹா” போன்ற நிறுவனங்கள் பாகிஸ்தானில் இருந்து விலகுவதும், டெனிம் ஜீன்ஸ் போன்ற நிறுவனங்கள் பங்களாதேஷுக்கு இடம்பெயர்வதும், அந்நிய முதலீடுகள் குறைவதையும், உள்நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரிப்பதையும் காட்டுகிறது.
பாகிஸ்தானின் இந்த மோசமான நிலைக்கு அடிப்படை மற்றும் நீண்டகால காரணமாக அந்நாட்டின் இராணுவத்தின் தலையீடே உள்ளது என்று விமர்சகர்கள் வலுவாக கருத்துத் தெரிவித்தனர். “பாகிஸ்தானில் உண்மையான ஆட்சி நடத்துவது இராணுவமே. அரசியல்வாதிகள் வெறும் பெயரளவிலேயே உள்ளனர். பாகிஸ்தான் இராணுவம், இந்தியாவின் பெயரை சொல்லி மக்களை பல ஆண்டுகளாக ஏமாற்றி, நாட்டை சுரண்டி வருகிறது. மக்களுக்காக எந்த நலப்பணியும் செய்யாமல், இராணுவத்தின் அனுமதி இல்லாமல் அரசியல்வாதிகள் செயல்படவும் முடிவதில்லை.
இந்தியா முதல் நாளிலிருந்தே கல்விக்கும், ஜனநாயகத்திற்க்கும் முக்கியத்துவம் கொடுத்தது. ஆனால், பாகிஸ்தான் கல்வி மற்றும் ஜனநாயகத்தின்மீது கவனம் செலுத்தவில்லை.
இன்று, பாகிஸ்தான் ஐ.எம்.எஃப் மற்றும் பிற நாடுகளின் கடனை நம்பி செயல்படும் ஒரு ‘பிச்சைக்கார’ நாடாக மாறிவிட்ட நிலையில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் பந்தயத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
