தீபாவளி நாளில் சிவனை வழிபடுவது எப்படி? கங்கா ஸ்நானம் ஆச்சான்னு கேட்பது ஏன்?

இன்று (20.10.2025) இனிய தீபாவளி பண்டிகை. சிவபெருமானை வழிபடக்கூடிய உன்னதமான நாள் தீபாவளி. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து விரதம் இருந்து சிவபெருமானை வழிபடும் அற்புதமான நாள்தான் இது. இந்த நாளில் நாம் சிவனிடம்…

இன்று (20.10.2025) இனிய தீபாவளி பண்டிகை. சிவபெருமானை வழிபடக்கூடிய உன்னதமான நாள் தீபாவளி. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து விரதம் இருந்து சிவபெருமானை வழிபடும் அற்புதமான நாள்தான் இது. இந்த நாளில் நாம் சிவனிடம் வேண்டும்போது நிச்சயமாக நிறைவேற்றித் தருவார்.

சிவனை வழிபடக்கூடிய அஷ்டவிரதங்களில் ஒன்று தீபாவளி. இந்த நாளில் பண்டிகை, பட்டாசு, இனிப்புகள் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் நிறைய விளக்கு ஏற்றி நாம் சிவனை வழிபடும்போது இன்னும் அற்புதமான பலன்களைத் தருகிறது. அதிகாலை 4 மணிக்கே தீபாவளி தொடங்கி விடுகிறது. கங்காஸ்நானம் அப்போதே உண்டு. சதுர்த்தசி திதி அமைந்து இருக்கும்போதே இந்த ஸ்நானம் அமைவதால் இதற்கு சதுர்த்தசி ஸ்நானம் என்ற பெயரும் உண்டு.

காலை எழுந்ததும் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் எண்ணை, சீகைக்காய் தேய்த்து சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும். அன்று கங்காதேவி சுடுநீரில் வாசம் செய்கிறாள். இந்த அரப்புப் பொடி, நல்லெண்ணை எல்லாவற்றிலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தேவதை வாசம் செய்கிறார்கள்.

சரஸ்வதி, லட்சுமி, கங்காதேவி இவர்கள் மூவரின் அருளுமே கங்கா ஸ்நானம் செய்வதால் கிடைக்கிறது. அதன்பிறகு புத்தாடை, மலர்கள் என இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தேவதைகள் எழுந்தருளி இருக்கிறார்கள். அதனால் தான் தீபாவளி அன்னைக்கு இதெல்லாம் முக்கியத்துவம் பெறுகிறது. பெரியவங்க ஒருத்தரை ஒருத்தர் பார்க்கும்போது ‘கங்கா ஸ்நானம் ஆகிடுச்சா’ன்னு அதனால தான் கேட்பாங்க.

இந்த நாள் மிக விசேஷமானது. காலையில் குளிக்கும் நேரம். சாமி கும்பிடும் நேரமும் அதுதான். காலை 6 மணிக்குள் பொழுது புலர்வதற்குள் இந்த வழிபாட்டை செய்வது நல்லது.

சிவபெருமான், அம்பாள் படங்களுக்கு மலர்கள் வைத்து அலங்கரித்து அன்று ஒரு வில்வ இலையாவது வைத்து வழிபடலாம். நம்மால் எத்தனை அகல்விளக்கு ஏற்ற முடியுமோ அதை ஏற்ற வேண்டும்.

அவற்றில் ஒன்றிலாவது நெய் விளக்கை ஏற்றுங்கள். அதன்பிறகு பலகாரங்கள் வைத்து வழிபடலாம். புதுத்துணி படைத்து வழிபடுபவர்கள் அப்படியே வழிபடலாம். அன்று சாஸ்திரத்துக்கு பட்டாசு வெடிக்க வேண்டும். நமக்கு யாரெல்லாம் முன்னோர்களோ, பெரியவர்களோ அவர்களை மனதார நினைத்து, சிவனை எண்ணி இந்த நாள் எனக்கு மகிழ்ச்சியா இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கொள்ளலாம்.

திருவாசகம், தேவாரம், கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். தீப ஒளியிலேயே சிவபெருமானை வழிபாடு செய்யக்கூடிய உன்னதமான திருநாள்தான் இந்தத் தீபாவளிப் பண்டிகை. அதிகாலையில் சாமி கும்பிட முடியாதவர்கள் காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை வழிபாடு செய்து கொள்ளலாம். அன்று அமாவாசை மாலையில்தான் வருகிறது.

பல வருடங்களில் அமாவாசை காலையில் வராது. அதனால் பிரச்சனை இல்லை. இயலாதவர்களுக்கும் நாம் உதவி செய்து கொடுத்துக் கொண்டாடும் பண்டிகைதான் இது. அன்னதானம் செய்ய முடிந்தால் 2 பேருக்காவது செய்யுங்க. அன்றைய தினம் யாராவது ஒருவருக்காவது வேஷ்டி, புடவை வாங்கிக் கொடுத்தால் அது ரொம்ப நல்ல பலன்களைப் பெற்றுத் தரும்.