தமிழக அரசியலில் நடிகர் விஜய் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்து வரும் நிலையில், அவருக்கு எதிராக ஆளுங்கட்சியான திமுக பல கட்டுப்பாடுகளை விதிப்பது, கடந்த கால அரசியல் வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்துகிறது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக கையாண்ட அதே வியூகங்கள், தற்போது விஜய்க்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
1972-ல் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து பிரிந்து, அ.தி.மு.க.வை தொடங்கியபோது, அன்றைய கருணாநிதி அரசு அவருக்கு கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தது. 1972 முதல் 1976 வரை, எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த சில வருடங்களில் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எம்ஜிஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உள்பட அவரது சில படங்கள் அரசின் நெருக்கடிக்கு உள்ளானது.
அதையும் மீறி எம்ஜிஆர் ஆட்சியை பிடித்தவுடன் அவர் உயிருடன் இருந்தவரை, அதாவது 1977 முதல் 1987 வரை, திமுகவால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தனது செல்வாக்குமிக்க நட்சத்திர அந்தஸ்தை பயன்படுத்தி, எம்.ஜி.ஆர். தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானார். அதன்பின் ஒரு வருடம் ஜனாதிபதி ஆட்சி நடந்து 1989ல் தேர்தல் நடந்தபோதும் கூட அதிமுக ஜெ, அதிமுக ஜா என இரண்டாக பிரிந்து இரட்டை இலை முடக்கப்பட்டதால் தான் திமுக ஆட்சியை பிடித்தது. அதன்பின் ஜானகி அரசியலில் இருந்து விலக, ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒருங்கிணைந்தது.
1989-ல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இருந்தபோது, ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்டு, அவரது சேலை இழுக்கப்பட்ட சம்பவம் தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகவே மாறியது. இந்த நிகழ்வு ஜெயலலிதாவுக்கு மக்களிடையே மிகப்பெரிய அனுதாபத்தை பெற்றுத் தந்தது.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., 1991, 2001, 2011, 2016 என நான்கு முறை திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது. குறிப்பாக1991 தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. இது திமுகவுக்கு ஜெயலலிதா ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில், இப்போது நடிகர் விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார். திரையுலகில் அவருக்கு இருக்கும் மாஸ் மற்றும் ரசிகர்களின் அடித்தளம் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. அதனால் தான் விஜய்க்கு தற்போது எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட 23 நிபந்தனைகள், அரசின் பயத்தின் வெளிப்பாடு. எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தபோது இல்லாத கெடுபிடிகள் விஜய்க்கு மட்டும் இருப்பது ஏன் என்ற கேள்வி, திமுக விஜய் மீது கொண்டிருக்கும் அச்சத்தை வெளிப்படுத்துகிறது.
விஜய், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு கொண்டவர். குறிப்பாக, விளிம்பு நிலை மக்களிடையே அவரது திரைப்படங்கள் மூலம் அவர் உருவாக்கியுள்ள பிம்பம், அவருக்கு அரசியல் ரீதியாக பெரும் பலத்தை கொடுத்துள்ளது. தலித் மக்களின் வாக்குகளையும் அவர் கணிசமாக பிரிப்பார் என்று கருதப்படுகிறது. இது, திமுக, விசிக போன்ற கட்சிகளுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவிடம் பல முறை தோற்ற திமுக, விஜய்யை ஒரு சாதாரண போட்டியாளராக கருதவில்லை. ஏனெனில், விஜய் திமுகவை ஒரே ஒரு முறை தோற்கடித்து நல்லாட்சி கொடுத்துவிட்டால் அதன்பின் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க பல ஆண்டுகள் ஆகலாம், அல்லது திராவிட ஆட்சி முடிவுக்கு கூட வரலாம். எனவே, திமுகவின் இலக்கு, விஜய்யின் அரசியல் பயணத்தின் தொடக்கத்திலேயே அவரை முடக்குவது. திமுகவை எதிர்த்து அரசியல் செய்த காங்கிரஸ், வைகோ, கமல்ஹாசன், போன்றவர்கள் தற்போது திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள் என்பதும் யோசிக்கத்தக்கது.
திமுகவின் அடக்குமுறைக்கு எதிராக விஜய் எப்படி எதிர்வினையாற்றப் போகிறார், இந்த அழுத்தங்களை அவர் எவ்வாறு வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்தே, அவரது அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். வரலாற்றை போலவே, இப்போதும் அடக்குமுறைகள் ஒரு தலைவனை உருவாக்கும் கருவியாக மாறலாம். விஜய், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போன்று ஒரு அரசியல் சக்தியாக உருவெடுப்பாரா, அல்லது திமுகவின் வியூகங்களுக்கு பலியாவாரா என்பதை வரும் காலங்கள் நமக்கு காட்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
