சிங்கம் எப்போதும் சிங்கம் தான்.. தலைவர் பதவியில் இல்லாவிட்டாலும் அண்ணாமலை தான் ஹைலைட்.. ஊடகங்களின் தலைப்பு செய்தியும் அவர் தான்.. அதிமுக விவகாரத்தில் அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச் என்ன?

பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, தற்போது மாநில அளவிலான பாஜகவில் எந்த பதவியிலும் இல்லாவிட்டாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், சில முக்கிய முடிவுகளை எடுக்க அவர் பரிந்துரை செய்வதாகவும்…

annamalai1

பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, தற்போது மாநில அளவிலான பாஜகவில் எந்த பதவியிலும் இல்லாவிட்டாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், சில முக்கிய முடிவுகளை எடுக்க அவர் பரிந்துரை செய்வதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்காதது ஒரு பேசுபொருளாக மாறியிருந்த நிலையில், அவர் கொடுத்த பேட்டி பல கேள்விகளுக்கு விடையளிப்பதாகவும், மேலும் பல புதிய யூகங்களை உருவாக்குவதாகவும் அமைந்துள்ளது.

அண்ணாமலை, தனது கருத்துக்களையும் நிலைப்பாட்டையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். கர்நாடகாவில் ஒரு திறமையான அதிகாரியாக பணியாற்றிய அவர், பல கட்சிகளில் வாய்ப்புகள் இருந்தும் பாஜகவை தேர்வு செய்தார். அவர் பாஜகவில் சேரும்போது, அக்கட்சி தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியும் கிடையாது, எதிர்கட்சியும் கிடையாது. இந்த ஒரு முடிவு, பாஜகவின் மீது அவருக்குள்ள உறுதிப்பாட்டை தெளிவாக காட்டுகிறது. அவரது நோக்கம் எப்போதும் பாஜகவின் நலனை முன்னிறுத்துவதாகவே இருந்துள்ளது.

அதிமுகவில் இருந்து விலகி சென்ற ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் தான் தொடர்ந்து பேசி வருவதாகவும், அவர்கள் மீண்டும் கூட்டணிக்கு திரும்புவார்கள் என நம்பிக்கை இருப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளது, அரசியல் அரங்கில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஓபிஎஸ், டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர் வேலுமணி, மூத்த தலைவர் செங்கோட்டையன் உள்ளிட்டவர்களுடன் அண்ணாமலை, தனிப்பட்ட நட்புறவை பேணுவதாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தைகள், பிளவுபட்ட அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க ஒரு பாலமாக செயல்பட வாய்ப்புள்ளது.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. இன்றைய நிலையில், கூட்டணி என்பது ஒரு கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான ஒரு வழி. அண்ணாமலை, 2026-ல் தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிடும் என முன்பு பேசியிருந்தாலும், தற்போதைய சூழலில் அதிமுகவுடன் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டுகிறார். இது, பாஜகவின் பங்களிப்புடன் ஒரு கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான முதல் படியாக இருக்கலாம். விஜய்யின் அரசியல் நுழைவு, சீமானின் அரசியல் நிலைப்பாடு போன்ற பல்வேறு அரசியல் சக்திகள் தமிழ்நாட்டில் உள்ள நிலையில், அண்ணாமலை போன்ற ஒரு தலைவரின் தெளிவான, கூர்மையான பேச்சுக்கள் கூட்டணி அரசியலுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது.

அவர் வெறும் ஒரு கட்சியின் தலைவராக மட்டுமல்லாமல், கூட்டணியின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறார் என்பது தெளிவாகிறது. அவருடைய பேச்சுக்கு டிடிவி தினகரன், ஜி.கே. வாசன் போன்ற தலைவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதும், இந்த புதிய அரசியல் அணுகுமுறையின் வெளிப்பாடே. பாஜகவின் மத்திய தலைமையும் இந்த விவகாரத்தில் அண்ணாமலையின் பங்களிப்பை எதிர்பார்த்திருக்கலாம்.

மொத்தத்தில் நயினார் நாகேந்திரன் தான் தமிழக பாஜக தலைவராக இருந்தாலும் ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் இன்னும் அண்ணாமலையையே தலைப்பு செய்திகளில் பேசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.