மத்திய அரசு நாடு முழுவதும் 10,900 மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக PM E-DRIVE என்ற திட்டத்தின் கீழ் டெண்டர் கோரியுள்ளது. ஆனால், தமிழக அரசு இத்திட்டத்தில் இணைய மறுத்திருப்பது அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு 4,500 பேருந்துகள், டெல்லி 2,800 பேருந்துகள், ஹைதராபாத் 2,000 பேருந்துகள், அகமதாபாத் 1,000 பேருந்துகள், சூரத் 800 பேருந்துகள் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழகம் மட்டும் ஏன் விலகி நிற்கிறது என்ற கேள்வி எழுகிறது.
மத்திய அரசின் PM E-DRIVE திட்டம்
மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகம் PM E-DRIVE (PM Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement) திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு, அதாவது 2026 மார்ச் 31 வரை, ₹10,900 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடங்கியுள்ளது. இதன் முக்கிய நோக்கம், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுபாட்டை குறைக்கவும் ஆகும். இத்திட்டத்தின் கீழ், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 9 நகரங்களில் இன்டர்சிட்டி மற்றும் இன்டர்ஸ்டேட் மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
மத்திய அரசின் திட்டத்தில் இணையாமல் விலகி நிற்கும் தமிழகம், தனது சொந்த மின்சாரப்பேருந்து திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மத்திய அரசின் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணத்தை நேரடியாக தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு அரசு ஏற்கனவே தனியாக மின்சார பேருந்துகளை வாங்கி இயக்கி வருகிறது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், ₹697 கோடி திட்ட மதிப்பீட்டில் 625 புதிய மின்சார தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கடந்த ஜூன் மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் 120 மின்சார பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 135 மின்சார பேருந்துகளை தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக அரசு தனது சொந்த நிதியில் பேருந்துகளை வாங்குவது, அரசியல் ரீதியாக ஒரு முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டத்திற்கு செல்லும்போது, நிதி மற்றும் செயல்படுத்தும் முறையில் மத்திய அரசின் தலையீடு இருக்கும். ஆனால், தமிழக அரசு தனது சொந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதுமாக மாநில அரசிடம் இருக்கும்.
மத்திய அரசின் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளாததன் பின்னணியில், அரசியல் நிலைப்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநில உரிமைகள் மற்றும் சுயாட்சி குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக அரசு, மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டங்களில் முழுமையாக சார்ந்திருக்க விரும்புவதில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் பிற மாநிலங்கள் மத்திய அரசின் நிதியுதவியுடன் திட்டங்களை செயல்படுத்தும்போது, தமிழ்நாட்டில் ஆளும் கட்சி சுயசார்புடன் செயல்பட முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதே சமயம், தமிழ்நாட்டில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. எனவே, மத்திய அரசின் திட்டத்தின் மூலம் கூடுதல் பேருந்துகள் கிடைத்தால், அது பொது போக்குவரத்தை மேம்படுத்த உதவும் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. எனினும், தமிழக அரசின் சொந்த திட்டம், எதிர்காலத்தில் மாநிலமே முழுவதும் மின்சாரப் பேருந்துகளை உற்பத்தி செய்து இயக்கும் அளவுக்கு முன்னேற உதவும் என்றும் கருதப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
