உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் அலாஸ்காவில் சந்தித்தனர். சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிறகு, இரு தலைவர்களும் போர் நிறுத்தம் குறித்து ஒரு “புரிதலை” எட்டியுள்ளதாக புதின் தெரிவித்தார். ஆனால், டிரம்ப் இதற்கு முரணாக, “ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை, அது ஒரு ஒப்பந்தம் அல்ல” என்று கூறி, உடனடியாக எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
பரஸ்பர பாராட்டுக்களும், உறுதியற்ற முடிவுகளும்
சந்திப்பிற்கு பிறகு, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை. மாறாக, ஒவ்வொருவரும் தனித்தனியாக பேசினர். முதலில் பேசிய புதின், டிரம்புடன் நடந்த உரையாடல் குறித்து பேசுகையில், “இது மிகவும் பயனுள்ள சந்திப்பு. உக்ரைன் குறித்து ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் இந்த முன்னேற்றத்திற்கு தடையாக இருக்க வேண்டாம்” என்று எச்சரித்தார்.
பின்னர் பேசிய டிரம்ப், “நாங்கள் மிகவும் பயனுள்ள சந்திப்பை நடத்தினோம். பல விஷயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன. மிகச்சில விஷயங்கள் மட்டுமே மீதமுள்ளன. ஒன்று மிகவும் முக்கியமானது, ஆனால் அதை எட்டுவதற்கு எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது” என்றார்.
யார் வெற்றி பெற்றார்?
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்தப் போர், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய தரைப் போர் ஆகும். இந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்றாலும், புதினை பொறுத்தவரை, நீண்ட வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவிற்கு வருவதும், டிரம்புடன் நேரடி சந்திப்பை நடத்துவதும் அவருக்கு ஒரு பெரிய வெற்றியாகவே கருதப்படுகிறது. இந்த சந்திப்பு, ரஷ்யாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை தடுப்பதாக அமைந்தது.
புதின், இந்த பேச்சுவார்த்தையின் “நட்பான” அணுகுமுறைக்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்தார். டிரம்ப் தனது நாட்டு நலன்களில் தெளிவாக உள்ளார் என்றும், அதே சமயம் ரஷ்யாவின் தேசிய நலன்களையும் புரிந்துகொள்கிறார் என்றும் புதின் அவரை பாராட்டினார். “இன்றைய ஒப்பந்தங்கள் உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மட்டுமல்லாமல், ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு புதிய, யதார்த்தமான உறவை ஏற்படுத்துவதற்கான தொடக்கமாகவும் இருக்கும் என நம்புகிறேன்” என்றும் புதின் கூறினார்.
டிரம்பும் புதினுக்கு நன்றி தெரிவித்து, “நாங்கள் மீண்டும் விரைவில் பேசுவோம், விரைவில் சந்திப்போம்” என்றார். புதின் புன்னகையுடன் “அடுத்த முறை மாஸ்கோவில்” என்று கூற, டிரம்ப் அது நடக்க வாய்ப்புள்ளது” என்றும் தெரிவித்தார்.
மொத்தத்தில் இந்த பேச்சுவார்த்தை வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்ற நிலையை அடைந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவை பொருத்துதான் இந்தியாவுக்கு வரி விதிப்பது குறித்து டிரம்ப் முடிவு செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், இனி அவர் என்ன செய்வார்? மோடி அதற்கு என்ன பதிலடி கொடுப்பார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
