உலகளாவிய வர்த்தகம் மற்றும் அரசியல் சூழலில், இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்காக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தினசரி கொள்முதல் 2 மில்லியன் பீப்பாய்களை தாண்டியுள்ளது.
உக்ரைன் போரை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதாரத்தடைகளை விதித்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கை உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பணிய மறுக்கும் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாகக் காட்டுகிறது.
குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் இந்த வர்த்தகத்திற்கு எதிராக கடுமையான கருத்துகளை தெரிவித்த நிலையில், இந்தியாவின் இந்த உயர்மட்ட கொள்முதல் அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்தியா, உலகிலேயே மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பிறகு, மேற்கத்திய நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க மறுத்ததால், சர்வதேச சந்தையில் அதன் விலை பெருமளவு குறைந்தது. ரஷ்யா, தனது கச்சா எண்ணெய்யை ஒரு பீப்பாய்க்கு 18 முதல் 20 டாலர் வரை தள்ளுபடி விலையில் விற்க தொடங்கியது. இந்த சலுகையைப் பயன்படுத்தி கொண்ட இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளை விட குறைந்த விலையில் கிடைக்கும் ரஷ்ய எண்ணெய்யை பெருமளவில் இறக்குமதி செய்ய தொடங்கியது.
இந்தியா 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, தனது மொத்த இறக்குமதியில் வெறும் 2% மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து பெற்றது. ஆனால், சலுகை விலை காரணமாக இந்த அளவு சுமார் 40% வரை உயர்ந்தது. இதன் மூலம், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்தியா பல ஆயிரம் கோடி ரூபாய்களை அந்நியச் செலாவணி சேமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
ரஷ்யாவுடனான இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் குறித்து அமெரிக்கா தொடர்ந்து தனது மிரட்டலை தெரிவித்து வருகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் போர் பொருளாதாரத்திற்கு நிதி அளிப்பதாக அமையும் என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. டொனால்ட் டிரம்ப், இந்தியா தனது ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
ஆனால், இந்தியாவின் வெளியுறவு கொள்கை மிகவும் தெளிவானது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவின் இறக்குமதி கொள்கை என்பது நாட்டின் நலன்களை அடிப்படையாக கொண்டது. எந்த நாடும் தனது உள்நாட்டு தேவைகளை எந்த நாட்டிலிருந்து பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூற முடியாது” என்று அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்தார். இந்தியாவின் இந்த நிலைப்பாடு, எந்தவொரு வெளிநாட்டு அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்பதையும், இந்தியாவின் தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் உலகிற்கு உணர்த்தியுள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்குவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்தியா பெரும் சவாலாக உள்ளது. டிரம்ப் தனது அச்சுறுத்தல்களின் மூலம் இந்தியாவை இந்த வர்த்தகத்திலிருந்து விலகச் செய்யலாம் என்று எதிர்பார்த்தார். ஆனால், இந்தியா தனது கொள்முதலை அதிகரித்திருப்பதன் மூலம் டிரம்ப்-ன் அழுத்தம் பலனளிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம், அமெரிக்காவின் சர்வதேச ஆதிக்கத்தை உலகநாடுகள் கிண்டல் செய்யும் நிலைமைக்கு சென்றுவிட்டது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
