ஜீவாத்மா, பரமாத்மா தொடர்பை ஏற்படுத்தும் இறைவனின் பிரதிநிதி குரு. மனித வாழ்க்கையில், குரு என்பவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்பது எல்லோருக்கும் தெரியும். ஜீவாத்மா, பரமாத்மா தொடர்பினை ஏற்படுத்துபவராகவும், இறைவனின் பிரதிநிதியாகவும் செயல்படுபவர் குரு.
குரு’ என்கிற சொல்லில் ‘கு’ என்பது இருள். அதாவது,அறியாமை. ரு’ என்றால் அகற்றுவது. இருளென்கிற அறியாமையை நீக்குகின்ற சக்தி குருவிற்கே உரியதாகும். புராணத்தில் குருவின் முக்கியத்துவம் ராமாயணத்தில் வசிஷ்ட மகரிஷி, ஸ்ரீராமபிரானுக்கு குருவாக விளங்கி வழிகாட்டினார். மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான், அர்ஜுனனுக்கு குருவாக இருந்து ‘கீதை’யை உபதேசித்தார்.
‘குரு கீதை’யில், சிவபெருமான், பார்வதி தேவியிடம் ‘குரு பக்தி ஒன்றே ஆன்மாவிற்கு சாத்தியமாகும்’ என்று கூறுகிறார். குரு பூர்ணிமா சாதுர்மாஸ்யத்தில் வரும் முதல் பௌர்ணமி, ‘குரு பூர்ணிமா’ எனக் கொண்டாடப் படுகிறது.
நன்மை பயக்கும் கல்வியறிவை தங்களுக்கு அளித்து வளர்த்த குருவை, சிஷ்யர்கள் வணங்கி இந்நாளில் வழிபடுவார்கள். குரு பூர்ணிமா ‘வியாச பூர்ணிமா’ என்றும் கூறப்படுகிறது. வியாசர் விபரங்கள் வியாசர் என்பதின் அர்த்தம் ‘பிரிப்பவர்’ என்பதாகும். பிரம்ம சூத்ரம்’ என்கிற உயர்ந்த நூலையும், 18 புராணங்களையும், சனாதன தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு வியாசர் எழுதியுள்ளார்.
பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில், வியாச அவதாரமும் ஒன்றெனக் கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில், அநேக வேத நூல்கள் பிரிக்கப்படாமல் இருந்தன. அச்சமயம், அனைவரும் வாய்மொழி வழியாகவே சொல்லிச் சொல்லி அதைப் பயின்றனர். நாட்கள் செல்லச் செல்ல மக்களின் வாழ்க்கை முறையில் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது.
இதைக் கண்ட வியாச மகரிஷி, வேதங்களை நான்காகப் பிரித்து உலகத்திற்கு அளித்த காரணத்தால், ‘வேத வியாசர்’ என அழைக்கப்பட்டார். குரு பூர்ணிமா தினத்தை இந்துக்கள் மட்டுமல்ல; பௌத்த மற்றும் ஜெயின் இனத்தவரும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். அதிகாலையில் எழுந்து நீராடி, தூய்மையான ஆடையணிந்து, விக்னேஸ்வர பூஜையில் ஆரம்பித்து, ஒவ்வொரு பூஜையாக, ஆத்ம பூஜை வரை செய்வது வழக்கம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



