இறைவனுடைய வழிபாடுகளில் பேதைமை இன்றி வழிபடக்கூடியதுதான் ரொம்ப ரொம்ப உயர்ந்த வழிபாடு. எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் அந்தத் தெய்வம் நமக்கு உயர்ந்ததுன்னு நாம சொல்றோம். அதே போல இன்னொரு தெய்வத்தை வணங்குபவருக்கு அந்தத் தெய்வம்தான் உயர்ந்ததுன்னு சொல்வதற்கான உரிமையும் உண்டு.
ஆனால் தெய்வங்களுக்குள்ள ஏதாவது பேதைமை இருக்கான்னு கேட்டா இல்லைங்கறதுதான் உண்மை. அதை எடுத்துக்காட்டுவதற்காக இறைவன் பல திருத்தலங்களில் மிக அழகாக எழில் கோலம் பூண்டு அருள்புரிகிறார். அந்த வகையில்தான் இன்னைக்கு நாம பார்க்கக்கூடிய ஆடித்தபசுக்கு உரிய திருத்தலமாக சங்கரன் கோவில் உள்ளது.
சங்கரன் கோவில் இங்கு ஏற்படுவதற்கும், இறைவன் எழுந்தருள்வதற்கும் ஒரு அழகான காரணம் உண்டு. சங்கன், பதுமன் என இரண்டு பேர். இவர்களில் சங்கன் சிவனையும், பதுமன் பெருமாளையும் வழிபடுகின்றனர்.
தான் வழிபடும் கடவுள்தான் பெரிசு என இருவரும் சண்டை போடுகின்றனர். இருவருக்கும் ஒரு கட்டத்தில் சண்டை முற்றிப்போகிறது. யார் வழிபடும் கடவுள் பெரிசுன்னு அம்பாளிடமே கேட்கலாம் என முடிவு செய்து அம்பாளை நோக்கித் தவம் இருக்கின்றனர். அம்பாள் அவர்கள் முன் தோன்றி யார் உயர்ந்தவர்னு எப்படி சொல்றது. ஒருவர் சகோதரர் நாராயணர். இன்னொருவர் கணவர் சிவபெருமான்.
சிவபெருமான் உயர்வுன்னு சொன்னா சகோதரனைக் குறைச்சிச் சொன்ன மாதிரி ஆகிடும். சகோதரர் உயர்வுன்னு சொன்னா சிவபெருமானைக் குறைச்சிச் சொன்ன மாதிரி ஆகிடும். அது மனைவிக்கு இலக்கணமாகாது. இப்போ மனைவியா நடந்துக்கறதா? சகோதரியா நடந்துக்கறதான்னு அம்பாள் யோசித்தாள். கடைசியில் ரெண்டு பேரும் ஒண்ணுன்னு சொன்னாள்.
அது எப்படி ஒண்ணாகும்னு கேட்க நேரா சிவபெருமானிடமே வந்தாள். இப்படி ரெண்டு பேரும் சண்டை போடுறாங்க. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான்னு அவங்களுக்குக் காட்சி கொடுக்கணும்னு வேண்டுகிறாள். அதற்கு இன்றைக்கு இருக்கும் சங்கரன் கோவில் அன்று காடாகக் காட்சி அளித்தது. அந்த இடத்துக்குப் போய் தவம் பண்ணுன்னு இறைவனே அம்பாளிடம் சொல்லி அனுப்பினாராம்.
அப்போது அம்பாள் புறப்படுகிற போது அவருடன் தோழிகள் எல்லாம் உடன் வருகிறார்களாம். அம்பாள் வேணாம். சுவாமி என்னைத் தான் தவம் இருக்கச் சொன்னார். நான் மட்டும் போயிட்டு வர்றேன். நீங்க எல்லாம் கையிலையிலேயே இருங்கன்னு சொல்ல அதைக் கேட்காமல் நாங்களும் வருகிறோம் என அவர்கள் பசுக்கூட்டங்களாக வந்தார்களாம்.
அம்பாள் ஊசி முனையில் நின்று கடும் தவத்தை மேற்கொள்கிறாள். கோமதி என்று அவளுக்குப் பெயர். சுற்றி கோ என்று சொல்லக்கூடிய பசு இனங்கள் சூழ, மதி நிறைந்த முகத்தோடு அம்பாள் தவத்தை மேற்கொள்கிறாள். அப்படி அம்பாளுடைய தவத்தை ஏற்றுக்கொண்ட சிவபெருமானும், நாராயணரும் சங்கர நாராயணராகக் காட்சி கொடுக்கின்றனர்.
அற்புதமான அழகான திருக்கோலம். வாழ்க்கையில ஒருமுறையாவது சங்கரன் கோவிலுக்குப் போய் அங்குள்ள சங்கரநாராயணரைத் தரிசித்து வாருங்கள். இங்கு சிவராத்திரியும் உண்டு. வைகுண்ட ஏகாதசியும் உண்டு. அம்பிகைக்குரிய வழிபாடாக இங்கு ஆடித்தபசு மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்த அற்புதமான நாள் வரும் 7.8.2025 அன்று வருகிறது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



