வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் முதல் மாநாடு, தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த மாநாட்டிற்கு பிறகு, தமிழக அரசியல் களம் முற்றிலும் மாறும் என்றும், திராவிட கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாநாடு, விஜய்யின் அரசியல் வியூகங்களை வெளிப்படுத்துவதோடு, எதிர்கால கூட்டணி குறித்த தெளிவையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணியில் சிக்கித் தவிக்கும் அதிமுக:
அதிமுகவுக்கு நெருக்கடி: தற்போதைய நிலையில், அ.தி.மு.க., பாஜக-வுடன் கூட்டணியில் இருந்தாலும், அது போதாது என ஒரு வலுவான கூட்டணியை தேடிவருகிறது. வேறு கட்சிகள் கூட்டணிக்கு வராவிட்டால், பாஜகவை வெளியேற்றிவிட்டு விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே, அ.தி.மு.க. தனது பாரம்பரிய வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
விஜய் இல்லாவிட்டால் சிதறும்: விஜய் தனது மாநாட்டில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை அறிவித்தால், அது அ.தி.மு.க.வுக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ஏற்கனவே பல கூறுகளாக பிரிந்துள்ள அ.தி.மு.க., விஜய்யின் ஆதரவு இல்லாமல் சிதறி போக வாய்ப்புள்ளது.
திமுக கூட்டணியில் பிளவு? காங்கிரஸ், விசிக வெளியேற வாய்ப்பு:
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் வி.சி.க. போன்ற கட்சிகள், விஜய்யின் அரசியல் வருகையால் ஒரு புதிய சிந்தனைக்கு தள்ளப்பட்டுள்ளன. விஜய்யுடன் கூட்டணி அமைத்தால், புதிய அரசியல் களத்தில் அதிக இடங்கள் கிடைக்கும் என அவர்கள் கருதக்கூடும்.
விஜய்யுடன் கைகோர்ப்பது:
மதுரை மாநாட்டிற்குப் பிறகு, விஜய்யின் அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும் பட்சத்தில், இந்த கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, விஜய்யுடன் கைகோர்க்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
திராவிடக் கட்சிகள் இல்லாத ஆட்சி? விஜய்யின் பலம்:
விஜய்யின் கட்சி, பெரும்பாலும் இளைஞர்களை மையமாக கொண்டுள்ளது. இந்த இளைஞர் சக்தி, திராவிட கட்சிகளின் கோட்டையை தகர்க்கும் என நம்பப்படுகிறது. மதுரை மாநாட்டில் விஜய்யின் உரையும், கட்சியின் கொள்கைகளும், இளைஞர்களை எந்த அளவிற்கு ஈர்க்கிறது என்பதை பொறுத்து இது அமையும்.
புதிய அத்தியாயம்:
தவெக மாநாட்டிற்கு பிறகு, தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, திராவிட கட்சிகள் இல்லாமல் ஒரு ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. இது, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞர் போன்றோர் உருவாக்கிய அரசியல் மரபில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
நல்ல காலம் தொடக்கம்?:
இளைஞர்கள், தொழில்நுடபத்தை பயன்படுத்தி, ஊழலற்ற, திறமையான ஆட்சியை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம், தமிழகத்திற்கு ஒரு நல்ல காலத்தை தொடங்கும் என்று மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.
மதுரை மாநாடு, விஜய்யின் அரசியல் சக்தியை நிலைநிறுத்துவதோடு, தமிழகத்தின் எதிர்கால அரசியல் திசையையும் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
