தமிழக அரசியலில் விஜய்யின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, அவர் தனித்து போட்டியிப்பாரா அல்லது கூட்டணி அமைப்பாரா என்பது குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.
விஜய்யின் தனித்து போட்டியிடும் கனவும் அதன் சாத்தியக்கூறுகளும்:
விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடித்துவிடலாம் என்று சிலர் கருதினாலும், அது வெறும் கனவே என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தற்போதைய கள நிலவரப்படி, விஜய்யால் தனியாக பாஜகவையோ அல்லது திமுகவையோ வீழ்த்தி ஆட்சிக்கு வர முடியாது என்பதே யதார்த்தம். அவரது உண்மையான அரசியல் களம் 2031 ஆம் ஆண்டுதான் எனவும் கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியின் தேவை மற்றும் பாஜகவின் நிலை:
“இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் திமுகவையும், குறிப்பாக உதயநிதியையும் சமாளிக்க முடியுமா? என்ற எண்ணம் விஜய்க்கு ஏற்படலாம். எனவே, அவர் தனது அரசியல் நிலைப்பாட்டில் கடைசி நேரத்தில் மனமாற வாய்ப்பு உள்ளது.
அதிமுகவுடன் விஜய் இணைந்தால் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பரவலாக நம்பப்படுகிறது. ஒருவேளை, அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும் பரவாயில்லை, திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் செயல்பட்டால், அந்த கூட்டணியில் கூட அவர் இணைந்து கொள்ள தயங்க மாட்டார் என்றொரு கருத்தும் நிலவுகிறது.
அதிமுக-விஜய் கூட்டணியின் பலம்:
விஜய் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றிவிட்டு, அதிமுக-விஜய் கூட்டணி அமைந்தால், கண்டிப்பாக 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
ஒருவேளை, அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய் இணைந்தால் கூட, திமுக சில தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தாலும், அதிமுக கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கும் என்று அரசியல் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவின் தலைமையை ஏற்றதிலிருந்தே தொடர் தோல்விகளை அடைந்து வருகிறார். ஸ்டாலினுக்கு எதிராக அவர் ஒரு வெற்றியை கூட இன்னும் தரவில்லை. எனவே விஜய்யின் வருகை அவருக்கு அவசிய தேவை ஆகிறது. விஜய்யும் அதிமுகவும் இணைவது விஜய்க்கும் பாதுகாப்பு, அதிமுகவுக்கும் பாதுகாப்பு. இருவருக்குமே ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு மட்டும் இன்றி திமுகவை வீழ்த்தி விடலாம் என்ற ஒரு அம்சமும் முக்கியமானதாகும்.
மொத்தத்தில் விஜய்யின் அரசியல் பயணத்தில், 2026 ஒரு முக்கியமான படிக்கல்லாக அமையும். தனித்து நின்று சாதனையை படைக்கும் கனவை விட, வலிமையான கூட்டணியின் மூலம் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதே நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்கும். அவரது அரசியல் ஞானமும், சரியான சமயத்தில் எடுக்கும் முடிவும் தமிழக அரசியல் களத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
