அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர மாட்டேன் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உறுதிபட கூறிவிட்ட நிலையில், அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியும், கம்யூனிஸ்டுகளும், மதிமுகவும் கூட்டணிக்கு வருமா என்பது சந்தேகமே. அரசியலில் ஒரே ஒரு ஆண்டு மட்டுமே அனுபவம் உள்ள ஒரு நடிகரை முதல்வர் ஆக்குவதற்கு, பல ஆண்டுகளாக அரசியல் செய்து வரும் மேற்கண்ட கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா என்பதும் சந்தேகம்தான். எனவேதான், விடுதலை சிறுத்தைகள் உள்பட மற்ற கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வராது என்று கூறப்படுகிறது.
அப்படியே வெளியே வந்தாலும், அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் சேர முடியாது என்பதால் வேறு வாய்ப்பு இந்த கட்சிகளுக்கு இல்லை. எனவேதான், வரும் தேர்தலை பொருத்தவரை அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியிலும் சரி, தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியிலும் சரி, வேறு எந்த பெரிய கட்சிகளும் சேராது என்றே கூறப்படுகிறது. சின்ன சின்ன ‘லெட்டர் பேடு’ கட்சிகள் வேண்டுமானால் இந்த கூட்டணிக்குச் சேரலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து விஜய் தனது நெருக்கமானவர்களிடம், “அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வேண்டாம்; மற்ற கட்சிகளும் வேண்டாம். தனித்து போட்டியிடுவோம். நமக்கு மாணவர்கள், இளைய தலைமுறையினர், பெண்கள் வாக்குகள் உள்ளன. அதுபோக சிறுபான்மையினர் வாக்குகளையும் பெறலாம். தீவிரமாக சுற்றுப்பயணம் செய்தால் இன்னும் வாக்கு சதவீதம் அதிகரிக்கும். குறிப்பாக கிராம பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்தால் ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை கைப்பற்றிவிடலாம்,” என்று சொன்னதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.
மொத்தத்தில், விஜய், விஜயகாந்த் மாதிரியே முதல் தேர்தலை தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை 40 முதல் 50 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ‘தொங்கு சட்டசபை’ ஏற்படும் நிலை வந்தால், அப்போது பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கலாம் என்றும், தேர்தலுக்கு முன்பு எந்தவித கூட்டணியும் வேண்டாம் என்றும் விஜய் முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
