சிலர் வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவ புண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா என கேள்வி எழுப்புவர். இது நல்ல கேள்வி.
ஆன்மிகத்தை நாடும் அன்பர்கள் அனைவரும் இந்தக் கேள்வியைத் தாண்டித்தான் வர வேண்டும். பல கேள்விகள் கேட்கும்போதுதான் ஆன்மிகத்தில் ஒரு தெளிவு கிடைக்கும். ஆன்மிகம் என்பது கடல் போன்றது.
உண்மையான ஆன்மிக தாகம் உள்ளவர்கள் தேடிக்கொண்டே இருப்பார்கள். நான் யார் என்பதில் இருந்து அந்தக் கேள்வியைத் தொடங்கினால் பல உண்மைகள் நமக்கே விளங்கும். ரமணமகரிஷி கூட அப்படித்தான் கேட்டார். கடைசியில் அது என்னவானது? நான் என்பது ஒன்றுமில்லாதது என்பதில் போய்த்தான் முடிகிறது.
மனிதர்கள் ஒரு ஒழுக்க நெறியுடன் வாழவே ஆன்மிகம் தேவைப்படுகிறது. அதை நாம் மூடநம்பிக்கை என புறம் தள்ளக்கூடாது. விரதம் இருப்பது, கோவிலுக்குச் செல்வது, இறைவனை வணங்குவது, பஜனை பாடுவது, யாகம் வளர்ப்பது என ஒவ்வொரு விஷயத்திலும் நாம் நம் பெரியோர்கள் கற்பித்த நடைமுறை வழக்கங்களைப் பின்பற்றி வர வேண்டும். அந்த வகையில் இந்தக் கேள்விக்கான விளக்கத்தை ஆராயும்போது பல உண்மைகள் நமக்கே கிடைக்கின்றன.
அதன்படி முற்பிறவி என்பது நமக்கு பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதே நேரம் அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் தான் உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம். நவக்கிரகங்கள் உள்ள கோவிலை நாம் அதைச் சுற்றி வழிபடும்போது பல பலன்கள் நமக்குக் கிடைக்கிறது.
நாம் எடுத்துக் கொண்ட காரியம் தங்கு தடையில்லாமல் நடந்தேறுகிறது. அதனால் இனி கோவிலுக்குப் போனால் நவக்கிரகங்களை வணங்கி அதைச் சுற்றி வழிபட மறந்துடாதீங்க. நவக்கிரகங்களை மனதார வணங்கி 9 சுற்று சுற்றினால் சிறப்பு.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களின் சிறப்பு என்னவென்றால் ஒன்று மற்றொன்றைப் பார்க்காது. நவக்கிரகங்களை சுற்றி வரும்போது தொட்டு வணங்கக்கூடாது. நவக்கிரகங்களை மட்டும் வணங்கிவிட்டு மூலவரை வணங்காமல் வந்துவிடக்கூடாது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



