திருமணத்துக்கு வருவோம் என்று சொல்லிவிட்டு, கடைசி நிமிடத்தில் வராத விருந்தினர்களிடம் பணம் வசூலிக்க ஒரு மணப்பெண் முடிவு செய்திருக்கிறார். இந்தச் செய்தி ரெடிட் தளத்தில் வெளியாகி, இணையத்தில் பெரும் விவாதத்தையே கிளப்பிவிட்டது.
திருமணம் என்றாலே பெரிய செலவு, அதிலும் உணவு ஏற்பாடுகள் ரொம்பவே முக்கியம். நம்ம ஊரில் பொதுவாக அதிக அளவில் உணவு சமைப்பார்கள். ஆனால், அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் பிளேட் கணக்கில் தான் கேட்டரிங் நடக்கும். அதாவது, எத்தனை பேர் வருவார்கள் என்று உறுதி செய்திருக்கிறார்களோ, அத்தனை பேருக்கு மட்டுமே உணவு தயாரிக்கப்படும். ஒவ்வொரு தட்டுக்கும் குறிப்பிட்ட தொகை செலவாகும்.
இதனால் எத்தனை பேர் வருகிறார்கள் என உறுதி செய்வது என்பது அங்கே ரொம்பவே முக்கியம். அந்த மணப்பெண்ணை பொறுத்தவரை, தகவல் கொடுக்காமல் விருந்தினர்கள் வராதது வெறும் நாகரிக குறைவு மட்டுமல்ல, அவருக்கு பெரும் நிதி சுமையாகவும் மாறியிருக்கிறது.
ரெடிட்டில் ஒரு பயனர் தனது நண்பரின் திருமணத்தில் நடந்ததை விவரித்திருக்கிறார். பயனர் தன்னுடைய தாய் மற்றும் காதலனுடன் திருமணத்தில் கலந்துகொள்ள முதலில் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், கடைசி நிமிடத்தில் காதலனின் வேலை மாறி, தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட, இருவராலும் வர முடியவில்லை.
இதை கேட்டு மணப்பெண் ரொம்பவே வருத்தமடைந்துவிட்டார். “ஒரு தட்டுக்கு 50 டாலர் செலவழித்தேன், வருவதை உறுதி செய்தும் அவர்கள் வரவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் வராததற்காக தலா 50 டாலர் கேட்க தோன்றுகிறது என்று அவள் என்னிடம் சொன்னாள்!” என்று அந்த ரெடிட் பதிவில் அதிர்ச்சியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு தட்டுக்கு 50 டாலர் செலவாகும் என்பது யாருக்கும் தெரியாது என்றும், அவசர நிலைகளை முன்னரே கணிக்க முடியாது என்றும் அந்த விருந்தினர் வாதிட்டிருக்கிறார். வெளியூர் திருமணம் என்பதால், அங்கு பயணிக்கவே கணிசமான செலவானதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பதிவுக்கு ஆயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்துள்ளனர். பலர் மணப்பெண்ணின் பக்கம் நின்றனர். விருந்தினர்களுக்கு வருவதாக உறுதிமொழி கொடுத்தால், அதை மதிக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தினர். சிலர், “வராத விருந்தினர்களிடம் அபராதம் வசூலித்தால், குறைந்தபட்சம் அவர்களுக்கு தங்களின் பங்கை பார்சல் செய்து கொடுத்திருக்கலாமே?” என்று நகைச்சுவையாக கேட்டனர்.
திருமண ஏற்பாட்டாளர்கள் சிலர், வருவதை செய்த பிறகும் 5-10% பேர் வராமல் போவது இயல்புதான்,” என்றாலும், “கடைசி நிமிடத்தில் ரத்து செய்தால் சிக்கல் தான் என்று சிலர் கூறினர்.
ஆனால், வேறு சிலரோ மணப்பெண் அதிகப்படியாக நடந்து கொண்டதாக உணர்ந்தனர். “இது ஒரு திருமணம், வணிக பரிவர்த்தனை அல்ல,” என்றும், அவசரநிலைகளுக்கு சலுகை காட்ட வேண்டும் என்றும் வாதிட்டனர். இதுபோன்ற ‘பில்லிங்’ நடவடிக்கைகளால் இனிமேல் திருமணம் போன்ற நிகழ்ச்சிக்கு வருவதை யாரும் உறுதி செய்ய மாட்டார்கள், மணமகன், மணமகள் குடும்பத்தினர் முன்னிலையில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
