அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில் பலியானவர்களில் ஏர் இந்தியாவின் 34 வயது கேபின் க்ரூ உறுப்பினரான தீபக் பாலாசாஹேப் பதக் என்பவரும் ஒருவர்.
தீபக், தனது மனைவி பூனம் மற்றும் பெற்றோருடன் பாட்லாபூரில் உள்ள கட்ட்ரப் கிராமத்தில் வசித்து வந்தார். உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், விபத்துக்கு சில நாட்களுக்கு முன்புதான் மருத்துவ விடுப்பில் இருந்தார். ஆனால், ஏர் இந்தியா அவரை அவசரமாக பணிக்குத் திரும்ப அழைத்ததால், மே 11 அன்று வேலைக்கு சென்றிருக்கிறார். இதுதான் அவரது கடைசி பயணமாக மாறியது.
விபத்து நடந்த அன்று காலை, தீபக் தனது தாயாருக்கு கடைசி செய்தியாக, “அம்மா குட் மார்னிங், நான் இப்போது கிளம்புகிறேன்” என்று தனது வழக்கமான குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அதுவே குடும்பத்தினருடனான அவரது கடைசி தொடர்பு என்பது அப்போது அவருக்கு தெரிந்திருக்காது..
தீபக்கின் உறவினர் சச்சின் கட்தாரே கூறியபோது, ‘தீபக்கிற்கு உடல்நிலை சரியில்லை, வீட்டில்தான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், ஏர் இந்தியா அவசரமாக அவரை அழைத்தது. அவர் போயிருக்காவிட்டால், இப்போதும் உயிருடன் இருந்திருப்பார். உண்மையில், அவரது அடுத்த விமானப் பயணம் ஜூன் 14 அன்றுதான் இருந்தது,” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
தீபக்கின் தந்தை பாலாசாஹேப் பதக், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் குடும்பத்தை பாட்லாபூருக்கு மாற்றினார். பரேலில் பள்ளிப்படிப்பை முடித்த தீபக், நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. ஏர் இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்த பிறகு, அவர் சமீபத்தில்தான் கேபின் க்ரூ உறுப்பினராக பதவி உயர்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து செய்தியைக் கேட்டதும், தீபக்கின் சகோதரிகள் வர்ஷா மற்றும் ஸ்ருத்திகா ஆகியோர் உடனடியாக அகமதாபாத்திற்கு பயணம் மேற்கொண்டனர். அவரது உடலை அடையாளம் காண உதவுவதற்காக அவர்களில் ஒருவர் டிஎன்ஏ மாதிரியை வழங்கியுள்ளார்.
இந்தக் கோர விபத்து நாடு முழுவதும் உள்ள குடும்பங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நாசிக் மாவட்டம், நிபாட் தாலுகாவில் உள்ள தீபக்கின் சொந்த கிராமத்திலிருந்து பல உறவினர்கள், துயரத்தில் ஆழ்ந்த குடும்பத்திற்கு ஆறுதலும் ஆதரவும் வழங்க பாட்லாபூருக்கு வந்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
