நிலநடுக்கம் ஏற்படும்போது ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை ஒலி எழுப்பும் வசதி ஏற்கெனவே வந்துவிட்டது. இப்போதோ, கூகுள் ஒரு படி மேலே சென்று, இந்த முக்கிய அம்சத்தை தனது ஸ்மார்ட்வாட்ச்களுக்கும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. புதிய தகவல்படி, விரைவில் Wear OS இயங்குதளத்துடன் வரும் கடிகாரங்களில், நிலநடுக்க எச்சரிக்கை வசதி கிடைக்கும். இதன் மூலம், நிலநடுக்கத்தின்போது உடனடியாக உங்களை பாதுகாத்துக் கொள்ளவோ அல்லது பாதுகாப்பான இடத்திற்கு செல்லவோ முடியும்.
ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டிருக்கும் தகவல்படி, கூகுள் Wear OS ஸ்மார்ட் வாட்ச்களுக்காக நிலநடுக்க எச்சரிக்கைகளை சோதனை செய்து வருகிறது. கூகுளின் சிஸ்டம் வெளியீட்டு குறிப்புகள் பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ‘பாதுகாப்பு மற்றும் அவசரம்’ பிரிவில், “நிலநடுக்கம் ஏற்படும்போது அதிர்வு எதிர்பார்க்கப்பட்டால், Wear OS சாதனங்களில் எச்சரிக்கைகள் கிடைக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது, ஆண்ட்ராய்டு போன்களை போலவே, கூகுள் ப்ளே சர்வீசஸ் செயலியுடன் Wear OS வாட்ச்களிலும் இயங்கும். இந்த அம்சம், கூகுள் ப்ளே சர்வீசஸ் பதிப்பு 25.21 உடன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த மாற்றம் குறித்து கூகுள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இந்த அம்சம் ஏற்கெனவே APK கோப்புகளை பிரித்துப் பார்க்கும்போது கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி குழுவினர், தங்கள் சோதனை சாதனங்களில் இந்த அம்சத்தை இயக்கிப் பார்த்ததில், நிலநடுக்க எச்சரிக்கைகள் ஆண்ட்ராய்டு போன்களை போலவே செயல்படுவது தெரிய வந்துள்ளது. அதாவது, நிலநடுக்கம் குறித்த தகவல்கள், மையப்பகுதிக்கு மதிப்பிடப்பட்ட தூரம், உங்கள் பகுதியில் ஏற்படும் அதிர்வுகளின் அளவு போன்ற விவரங்களுடன் எச்சரிக்கை கிடைக்கும்.
ஆனால், இந்த அம்சத்திற்கு செல்லுலார் இணைப்பு தேவைப்படலாம். எனவே, சாம்சங் உள்ளிட்ட eSIM வசதியுள்ள Wear OS ஸ்மார்ட்வாட்ச்களில் இந்த நிலநடுக்க எச்சரிக்கை சிறப்பாக செயல்படும். நிலநடுக்கம் போன்ற அவசர சூழ்நிலைகளில் மக்களை பாதுகாக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இந்த நிலநடுக்க எச்சரிக்கை அம்சம், உங்கள் கையில் கட்டப்பட்டிருக்கும் வாட்ச்சிலேயே கிடைப்பதால், போனை தேடி எடுப்பதை விட இது மிகவும் எளிதாகவும், உடனடியாக செயல்படவும் உதவும்.
ஏற்கனவே ஹார்ட் அட்டாக் உள்பட பல நோய்களை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வசதி ஸ்மார்ட் வாட்ச்சில் உள்ள நிலையில் தற்போது நிலநடுக்கத்தையும் எச்சரிக்கை செய்யும் வசதி வர இருப்பது மனிதர்களின் பாதுகாப்பை ஸ்மார்ட் வாட்சுகள் மேலும் அதிகரித்து வருகிறது என்பதை உறுதி ஆகிறது. ‘நான் ஒரு தடவை சொன்னா, 100 தடவை சொன்ன மாதிரி என்ற வசனம் போல், இந்த ஒரு ஸ்மார்ட் வாட்சை கட்டினால் 100க்கும் மேற்பட்ட பலன் கிடைக்கும் என நெட்டிசன்கள் இந்த வாட்சுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.