பொதுவாம நாம் எல்லோரும் நகைகளை வங்கி லாக்கர்களிலோ அல்லது வீட்டுப் பெட்டகங்களிலோ வைத்துக்கொள்வோம். ஆனால், உலகின் பெரும் பணக்காரர்கள் மிகவும் ரகசியமான, பாதுகாப்பான மற்றும் நவீனமான ஒரு வசதியை நம்பி உள்ளனர். அதுதான் சிங்கப்பூரில் உள்ள “தி ரிசர்வ்” (The Reserve) என்ற இடம்.
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு அருகில், “தி ரிசர்வ்” என்ற இந்த ஆறு மாடி கட்டிடம் வெளியில் யாருக்கும் தெரியாத வகையில் ரகசியமாக உள்ளது. இங்கு சுமார் ₹12,500 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் பிற விலையுயர்ந்த உலோகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடத்திற்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. உலகப் பணக்காரர்கள், பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் அதிக சொத்து உள்ளவர்களுக்காக பாதுகாப்பான பெட்டகமாக இது செயல்படுகிறது.
கிரிகோர் கிரெகர்சன் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த வசதியை, அவரது சில்வர் புல்லியன் என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது. உலக அளவில் சொத்துகளை பாதுகாப்பதில் இது ஒரு நம்பகமான நிறுவனமாக உள்ளது. உள்ளே, ஆயிரக்கணக்கான பெட்டகங்கள் தடிமனான கான்கிரீட் சுவர்களுக்குள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை மட்டுமல்லாமல், முழுமையான ரகசியத்தன்மையையும் வழங்குகிறது.
2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை மட்டும், “தி ரிசர்வ்”-ல் விலைமதிப்பற்ற பொருட்களைச் சேமிப்பதற்கான தேவை 88% அதிகரித்துள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக உலகின் பெரும் பணக்காரர்கள் பாரம்பரிய வங்கி அமைப்புகள் மற்றும் முதலீடுகளை நம்பாமல் இந்த கட்டிடத்தில் தங்கள் தங்கத்தை பாதுகாத்து வைத்துள்ளனர்.
உலக அளவில் தற்போது வர்த்தகப் போர்கள், பணவீக்கம் மற்றும் பல நாடுகளில் வங்கிகள் திவாலானது, இரு நாடுகளுக்கு இடையிலான போர் ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அசைத்துள்ளன. லெபனான், அல்ஜீரியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில், பொருளாதார அழுத்தத்தால் வங்கிகள் திவாலாகியுள்ளன. இதனால் பல பணக்காரர்கள் இப்போது வங்கிகளில் அல்லது பங்கு வர்த்தகத்தில் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீடு செய்வதற்கு பதிலாக, தங்கத்தை வாங்கி அதை பாதுகாப்பாக சேமிக்க விரும்புகிறார்கள்.
சர்வதேச அளவில் தங்கத்தை மாற்றுவதும் சேமிப்பதும் எளிதான காரியமல்ல. போக்குவரத்து, காப்பீடு மற்றும் உயர்நிலை பாதுகாப்பு என செலவுகள் அதிகம். அதனால்தான் “தி ரிசர்வ்” போன்ற வசதிகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு உதவுகின்றன. இவர்கள் தங்கத்தை ஒரு பொருளாக மட்டுமல்லாமல், நிச்சயமற்ற காலங்களில் நிதிப் பாதுகாப்பிற்கான ஒரு அடித்தளமாகக் கருதுகிறார்கள்.
தங்கம் மட்டுமல்ல, தங்கள் பரம்பரைச் சொத்தையும் பாதுகாக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
