வேலை மாற்றம் என்பது தற்போது பெரும்பாலான பணியாளர்களிடையே ஒரு கலாச்சாரமாகவே மாறியுள்ளது. இது ஊதிய உயர்வு, பதவிகள், அல்லது பிற வெளிப்புற நன்மைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், நியமித்த இடைவெளியில் வேலை மாற்றுவது பரவலாக காணப்படுகிறது. பெரும்பாலும் ஒரு பணியாளர், வேலை மாற்றம் மூலம் சுமார் 30% முதல் 40% வரை, சில சமயங்களில் 100%க்கும் அதிகமாக ஊதியத்தை உயர்த்த முடியும் என கூறப்படுகிறது.
ஆனால், ஒரே ஒரு வேலை மாற்றத்தில் 700% ஊதிய உயர்வு கிடைத்ததை நீங்கள் நம்புவீர்களா? நம்ப முடியாவிட்டாலும், இது உண்மையில் ஒரு சாப்ட்வேர் டெவலப்பருக்கு அது நடந்திருக்கிறது. அவருடைய வேலை மாற்றம் பற்றிய கதை இணையத்தில் வைரலாகி, பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த இளம் சாப்ட்வேர் டெவலப்பர் ஒருவர் சமீபத்தில் தனது தொழில்துறை பயணத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். அதில், ஒரு பெரிய டெக் நிறுவனத்தில் ரூ.5.5 லட்சம் வருட வருமானத்துடன் வேலையை தொடங்கினார். ஆனால் இன்று வேறொரு நிறுவனத்திற்கு அவர் மாறிய நிலையில் அவருடைய சம்பளம் ஆண்டுக்கு ரூ.45 லட்சம் பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவேஷ் என்ற சாப்ட்வேர் டெவலப்பர் தனது முழுநேர வேலை வாழ்க்கையை வெறும் ஒரு வருடத்திற்கு முன்தான் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு சாதாரண ஊதியத்துடன் துவங்கி, தற்போது ஒரு உலகப் புகழ்பெற்ற டெக் நிறுவனத்தில், துவக்க ஊதியத்தின் ஒன்பது மடங்கு உயர்வுடன் வேலை செய்கிறார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இவர், இப்படியான வளர்ச்சி மிகவும் கனவுபோல இருந்ததாக கூறியுள்ளார், அதனால் தான் இது பலரின் மனதையும் தொட்டுள்ளது.
பலரும் அவரைப் பாராட்டி, சிலர் சந்தேகத்துடன் விமர்சனம் செய்த போதும், தேவேஷ் மேலும் விளக்கம் அளித்துள்ளார். தொடக்கத்திலேயே அதிக ஊதியம் தேடுவதைவிட, கற்றல் மற்றும் அனுபவம் எனும் இரண்டு அம்சங்களையே முக்கியமாக நினைக்க வேண்டும் என புதிய தொழில்நுட்பப் பணி தேடுபவர்களுக்கு அறிவுரை கூறினார்.
தொழில்துறையில் ஆரம்ப கட்டம் என்பது ஆழ்ந்த அனுபவத்தையும், நல்ல நுணுக்கங்களை பெறுவதற்கும், குறைவான ஊதியத்திலும் திறமைகளை மேம்படுத்துவதற்குமான ஓர் அரிய வாய்ப்பு எனவும் கூறினார். திறமையாகவும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டால், பின்னாளில் இதுபோன்ற பெரிய ஊதிய உயர்வுகள் கிடைப்பது சாத்தியம் என அவர் கூறியுள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
