மோகன்லால் நடிப்பில் பிரதிவிராஜ் இயக்கத்தில் உருவான ’எம்புரான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 200 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. ஒரு பக்கம் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தாலும், இன்னொரு பக்கம் அரசியல்வாதிகளின் கண்டனங்களையும் இந்த படம் பெற்றுக் கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் இந்த படம் குறித்து பேசும் அளவுக்கு இது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் கூட தமிழக சட்டமன்றத்தில், இந்த படத்தின் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், திடீரென ’எம்புரான்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன் அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஒரே நாளில் சென்னை, கொச்சி உள்பட சில இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ. எம். கோபாலன் ஒரு தயாரிப்பாளராக மட்டுமின்றி, “ஸ்ரீ கோகுலம் சிட்ஸ்” என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி உள்பட பல மாநிலங்களில் இவரது நிறுவனம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனங்களில்தான் தற்போது திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, 2017 ஆம் ஆண்டு “ஸ்ரீ கோகுலம் சிட்ஸ்” நிறுவனத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அப்போது 1107 கோடி ரூபாய் வரி விதிப்பு செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
தற்போது ’எம்புரான்’ திரைப்படத்தின் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மீண்டும் “ஸ்ரீ கோகுலம் சிட்ஸ்” மீது சோதனை நடைபெற்று வருவது, சினிமாவில் அரசியல், அரசியலில் சினிமா சிக்கி தவிக்கிறது என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சோதனையின் முடிவில், அமலாக்கத்துறை அதிகாரிகள் என்ன அறிக்கை வெளியிடுகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.