ட்விட்டர் பறவையின் லோகோ ஏலத்திற்கு வந்துள்ள நிலையில், இதுவரை இந்திய மதிப்பில் 18 லட்சம் ரூபாய் வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் 20ஆம் தேதி வரை இந்த ஏலம் திறந்த நிலையில் இருக்கும் என்பதால், இன்னும் அதிகமாக ஏலம் கேட்க வாய்ப்பு உள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக ட்விட்டர் மற்றும் அதன் பறவை லோகோ உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த நிலையில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி, எக்ஸ் என பெயர் மாற்றிய பிறகு, ட்விட்டரின் தலைமை அலுவலகம் இருந்த மார்க் ஸ்ட்ரீட்டில் உள்ள அலுவலகத்தில் இருந்து இந்த லோகோ சின்னம் கீழே இறக்கப்பட்டது.
இதனை தற்போது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை $21,664 வரை ஏலம் எட்டியுள்ளது. ஏல நடவடிக்கை மார்ச் 20ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதால், மேலும் அதிக அளவில் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பறவை லோகோ சின்னம் 12 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்டதாகும். மேலும், 254 கிலோ எடையுடன் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏலம் எடுப்பவர்கள், அந்த இடத்திலிருந்து தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு செல்ல தேவையான செலவுகளை அவர்களே கவனித்துக் கொள்ள வேண்டும் என ஏலத்தில் விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இந்த லோகோ சின்னத்தை தூக்குவதற்கு கிரேன் மற்றும் தொழிலாளர்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எக்ஸ் என பெயர் மாற்றப்பட்டிருந்தாலும், இன்னும் பலரும் இதனை ட்விட்டர் என்றே அழைத்து வருகின்றனர். அதேசமயம், இந்த பறவை லோகோ மக்களின் மனதில் என்றும் நீங்காது என்பது குறிப்பிடத்தக்கது.