டெல்லியை சேர்ந்த அந்த தொழிலதிபர், 2015 ஆம் ஆண்டு தனது மனைவி இறந்த பிறகு மகனுடன் வசித்து வந்தார். தொழில் நிமித்தமாக அவ்வப்போது மும்பைக்கு செல்வதுண்டு. மும்பையில் தன்னை பாடகராக அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு பெண்ணை தற்செயலாக சந்தித்தார். முதலில் நட்பாக தொடங்கிய இவர்களது உறவு, பின்னர் காதலாக மாறியது.
அதன் பின், தொலைபேசி மற்றும் வீடியோ கால் மூலமாகவும் இருவரும் தொடர்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில்தான் அந்த பெண், அவ்வப்போது லட்சக்கணக்கில் தொழிலதிபரிடம் பணம் வாங்கி வந்தார். காதல் போதையில் தொழிலதிபரும் அவர் கேட்ட பணத்தை வழங்கி வந்தார்.
ஒரு முறை, அந்த பெண் திடீரென ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு வாங்க வேண்டும் என்று பணம் கேட்டபோது, தொழிலதிபர் பணம் தர மறுத்துவிட்டார். இதன் பின்னர், தொழிலதிபர் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக அந்த பெண் புகார் அளித்தார், இதனால் தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், உண்மையில் அந்த பெண்ணே குற்றவாளி என்றும், தொழிலதிபரை அவ்வப்போது ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்தது. பணம் ட்ரான்ஸ்பர் ஆனதற்கான அனைத்து ஆவணங்களும் கிடைத்த நிலையில், தற்போது அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, இந்த பெண் ஏற்கனவே பலரை இவ்வாறு ஏமாற்றியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.