எம்ஜிஆருடைய வெற்றிப்படங்களில் பல படங்களைத் தந்தவர் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா. அந்த வகையில் அவரது படம் ஒன்றை டி.ஆர்.ராமண்ணா இயக்கிக் கொண்டு இருந்தார். படப்பிடிப்பு தளத்திற்கு கவிஞர் வாலி சென்று இருந்தார். அன்று டிஆர்.ராமண்ணா படமாக்கிக் கொண்டு இருந்தது எம்ஜிஆருடைய தாயார் சம்பந்தப்பட்ட காட்சி.
படமாக்கி முடிந்ததும் வாலி பக்கத்தில் அமர்ந்தார் டி.ஆர்.ராமண்ணா. எம்ஜிஆருடைய அம்மா வேடத்தில் இந்த நடிகை தான் நடிக்கிறாருன்னு எம்ஜிஆருக்குத் தெரியுமா என்று டி.ஆர்.ராமண்ணாவிடம் கேட்டார் வாலி.
எம்ஜிஆருக்கு சங்கடம்
‘ஏன் எதுக்காகக் கேட்குறீங்க’ன்னு டி.ஆர்.ராமண்ணா சற்று பதட்டத்துடன் கேட்டார். அப்போது வாலி, ‘ரொம்ப நாளைக்கு முன்னாடி சாயான்னு ஒரு படத்துல எம்ஜிஆர் குதிரை ஏறுற மாதிரி காட்சி. அப்போ ஏறும்போது சற்று தடுமாறி கீழே விழுந்துவிட்டார். அப்போ அந்தப் படத்துல கதாநாயகியா நடிச்சிக்கிட்டு இருந்த இவங்க ‘களுக்’குன்னு சிரிச்சிட்டாங்க.
அந்த உடனே எம்ஜிஆருக்கு சங்கடமாகிடுச்சு’ன்னு சொன்னார் வாலி. அப்படி சொன்ன உடனே டி.ஆர்.ராமண்ணா மிகப்பெரிய கலக்கம் அடைந்து அந்த நடிகையை மாற்றி வேறொரு நடிகையை வைத்து அந்தக் காட்சியை எடுத்து முடித்தார்.
ஒரு 10 நாள் கழித்து எம்ஜிஆரிடம் இந்த சம்பவத்தை சொன்னார் கவிஞர் வாலி. ‘என்ன கவிஞரே இப்படி பண்ணிட்டீங்க. அந்த அம்மா அன்னைக்கு மிகப்பெரிய உயரத்துல இருந்தவங்க. அந்தப் படத்தோட கதாநாயகி. நான் சற்று தடுமாறி கீழே விழுந்ததும் அதைப் பார்த்து சிரிச்சிட்டாங்க. அது தவறா? அதுக்காக அவரைப் பழி வாங்குவதா? அது எப்படி சரியா இருக்கும்’னு கேட்டு டி.ஆர்.ராமண்ணாவை அழைத்துப் பேசினார். ‘என்ன பண்ணுவீங்களோ தெரியாது.
எம்ஜிஆர் போட்ட உத்தரவு
அந்த நடிகையை மீண்டும் கூப்பிட்டு அவங்களையே வைத்து அந்தக் காட்சியைப் படமாக்குங்கள்’ என்றார். அந்தக் காட்சியில் அந்த அம்மாவை நடிக்க வைத்து டி.ஆர்.ராமண்ணா கொடுத்த சம்பளம் 10 ஆயிரம் ரூபாய். இந்த சம்பளத்தைப் பற்றி ஒரு கட்டுரையில் பதிவு செய்து இருந்தார் வாலி. அதில் ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்ற வள்ளுவனின் வாழ்க்கைக்கு ஏற்ப வாழ்ந்தவர் எம்ஜிஆர் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.