கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?

By Sankar Velu

Published:

மாதந்தோறும் சஷ்டி திதி வருகிறது. அந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாதம் வரும் சஷ்டிக்கு மகா சஷ்டின்னு பேரு. அதைக் கந்த சஷ்டின்னும் சொல்வாங்க. தீபாவளிக்குப் பிறகு வரும் விரதம் தான் கந்த சஷ்டி. இந்த நாளில் எப்படி விரதம் இருப்பதுன்னு பார்ப்போம்.

மகா கந்த சஷ்டி விரதம் இந்த ஆண்டு 2.11.2024ல் துவங்குகிறது. உங்களது உடலுக்கு ஏற்ப எந்த வகை விரதம் இருந்து கொள்ள வேண்டுமோ அதைக் கடைபிடித்துக் கொள்ளலாம். ஒரு சிலர் ஒருவேளை மட்டும் விரதம் இருப்பாங்க. ஒரு சிலர் 2 வேளை, இன்னும் சிலர் 3 வேளையும் விரதம் இருப்பாங்க. அதுக்குப் பதிலாக பால் மட்டும் குடிப்பாங்க. ஒரு சிலர் பழமும், பாலும் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருப்பாங்க.

சுவாமிக்கு அபிஷேகம் பண்ணிய பால் மட்டும் ஒரு வேளைக்குக் குடிப்பாங்க. காலை ஒரு வாழைப்பழம், மதியம் ஆப்பிள். இரவில் மாதுளையுடன் ஒரு டம்ப்ளர் பால்னு குடிப்பாங்க. இன்னும் சிலர் ஒரு இளநீர் மட்டும் குடித்தபடி விரதம் இருப்பாங்க. இன்னும் ஒரு சிலர் உணவே இல்லாமல் வெறும் மிளகு மட்டும் வைத்து விரதம் இருப்பாங்க. அதை ஒவ்வொரு நாளும் அதிகப்படுத்திக் கொண்டு போக வேண்டும்.

Lord Muruga
Lord Muruga

7 நாள்களும் ஒவ்வொன்றாக அதிகரித்தபடி விரதம் இருக்கலாம். இன்னும் சிலர் உப்பில்லாமல் விரதம் இருப்பாங்க. பால் சாதம், தயிர்சாதம் மட்டும் எடுத்துக்கொள்வாங்க. இன்னும் ஒரு சிலர் வெறும் காய்கறி, கீரைகள் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருப்பாங்க. இதுல யாருக்கு எது தேவை? எது பழக்கம் என்று தேர்வு செய்து அந்த விரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

எந்த விரதம் எடுத்தாலும் தண்ணீர் மட்டும் குடிக்காமல் இருக்காதீங்க. தண்ணீருக்கு தோஷமே கிடையாது. தாராளமாக எந்த விரதமாக இருந்தாலும் குடிக்கலாம். பகலில் தூங்கக் கூடாது. இரவில் தூங்கிக் கொள்ளலாம்.

2ம் தேதி பிரதமை அன்று மாலை 8.06 மணி வரை உள்ளது. அதனால் காலையிலேயே 6 மணிக்குள் காப்புக் கட்டிக் கொண்டு விரதம் இருக்கலாம். வீட்டில் உள்ள முருகரின் திருவுருவப்படத்தை எடுத்து வைத்து வழிபடலாம். அல்லது முறைப்படி கலசம் வைத்தும் வழிபடலாம். சூரிய உதயத்துக்கு முன்னாடியே விரதம் இருக்க ஆரம்பித்து விடுங்கள்.

அது தான் ஆற்றல் மிகுந்தது. பெரியவங்கக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கியதும் விரதம் இருக்கத் தொடங்குங்க. யாருமே இல்லாவிட்டால் முருகப்பெருமானிடமே ஆசிர்வாதம் வாங்கிட்டு விரதம் இருக்கலாம். மஞ்சள் நூலில் வைத்துக் காப்புக் கட்டிக் கொள்ளலாம். ஏதாவது ஒரு மலர் வைத்துக் கொள்ளலாம். நைவேத்தியமாகக் காய்ச்சிய பாலுடன் தேன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். ரெண்டு வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு வையுங்க. அப்புறம் காலை 6 மணிக்குள்ள பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்.

பட்டினி விரதம் இருப்பவர்கள் தேவையில்லாமல் நிறைய பேசாதீங்க. அமைதியாக, பொறுமையாக, நிதானமாக இருங்க. நாமளும், முருகரும் மட்டும் தான் நினைவில் இருக்க வேண்டும். நிறைய பதிகங்கள் படிங்க. ஓய்வா இருந்தா ஓம் சரவணபவ எழுதுங்க. 7 நாள் விரதம் இருக்க வேண்டும். திருக்கல்யாணம் அன்று தான் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளுமே ஒவ்வொரு விதமான பூஜை இருக்கிறது.

கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களும் இந்த விரதத்தை எடுக்க வேண்டாம். இப்படி விரதம் இருந்தால் குழந்தைப் பேறு கண்டிப்பாகக் கிடைக்கும். கல்யாணம் ஆகும். நீண்ட நாள் நோய் தீரும். செல்வம் பெருகும். வேலை கிடைக்கும். வழக்கு, சண்டை சச்சரவுகள், இதர பிரச்சனைகள் விலகி ஓடும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.