கோவை: சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்ணை நேரில் அழைத்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.
கோவை சித்தாபுதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் நிர்மலா (வயது 41). இவர் தனது தாயார் சாரதாவுடன் கடந்த 20-ந் தேதி மாலையில் சித்தாபுதூரில் இருந்து பாலசுந்தரம் சாலை வழியாக அண்ணாசிலை சந்திப்பு வரை நடைப்பயிற்சி சென்றார்.
அப்போது பாலசுந்தரம் சாலையில் ஒரு பண்டல் கிடந்தது. அதை பார்த்த நிர்மலா அந்த பண்டல் கட்டை எடுத்து பிரித்து பார்த்த போது, அதில் ரூ.50 ஆயிரம் பணம் இருந்தது. பணத்தை தேடி யாராவது வருகின்றனரா? என அவர் சிறிது அங்கு காத்திருந்து பார்த்தார்.
ஆனால் யாரும் வரவில்லை. இதையடுத்து மறுநாள் 21-ந் தேதி காலை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு சென்ற நிர்மலா, அங்கு இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமாரிடம் சாலையில் கண்டு எடுத்த ரூ.50 ஆயிரத்தை ஒப்படைத்தார்.
இதுகுறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்த போது, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவர் ரூ.7½ லட்சத்தை வங்கியில் இருந்து எடுத்துச் செல்லும் போது, அதில் இருந்து ஒரு பண்டல் சாலையில் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்று கொள்ள ஒப்பந்ததாரரிடம் ரேஸ்கோர்ஸ் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதற்கிடையே சாலையில் கிடந்த பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த நிர்மலாவை நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.