டெல்லி முதலமைச்சராக அதிஷி தேர்வு… 11 வருடங்கள் கட்சியில் இருந்தவருக்கு ஜாக்பாட்..!

By Bala Siva

Published:

 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அனைத்து எம்எல்ஏக்களும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் சக்சேனாவை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் கெஜ்ரிவால் இல்லத்தில் சந்தித்து, டெல்லி அரசை அடுத்ததாக வழிநடத்தக்கூடியவர் யார் என்பதில் விவாதித்தனர். அதனை தொடர்ந்து, கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூடி விவாதித்தது.

இந்த விவாதத்திற்கு பின் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார். இதற்கு அனைத்து எம்எல்ஏக்களும் ஒப்புதல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த அதிஷி?

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களால்   அடுத்த முதல்வராக முன்மொழியப்பட்ட அமைச்சர் அதிஷி, டெல்லி அரசின் கேபினட் அமைச்சராக உள்ளார். கல்வித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறை போன்ற முக்கியத் துறைகளை வைத்துள்ள இவர் டெல்லியின் கல்காஜி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் அதிஷி, 2013-ம் ஆண்டு முதல் 11 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.