ஆவணி மாத திங்கள்கிழமை (02.09.2024) இன்று அமாவாசையும் சோமவாரமும் இணைந்து வருவதால் இன்றைய நாளை அமாசோமவாரம் என்று அழைக்கிறோம்.
இன்று நாம் செய்ய வேண்டியது அரசமரத்தை வழிபட்டு வலம் வர வேண்டும். இது நமக்கு நல்ல அதிர்வுகளை உண்டாக்கும். தீராத நோய்களும் தீரும்.
திங்கள்கிழமை வலம் வந்தால் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். செவ்வாய் கிழமை இப்படி வலம் வந்தால் செவ்வாய் தோஷங்கள் விலகும். புதன்கிழமை வலம் வந்தால் வியாபாரம் பெருகும்.
வியாழக்கிழமை வலம் வந்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம். வெள்ளிக்கிழமை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். சனிக்கிழமை வலம் வந்து வணங்கினால் சர்வ கஷ்டங்களும் விலகி மகாலெட்சுமியின் பேரருள் கிட்டும்.
எத்தனை முறை வலம் வந்தால் என்னென்ன நடக்கும் என்பதற்கும் பலன்கள் இருக்கின்றன. அதையும் தான் பார்ப்போமே…

3 முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும் அடையலாம். நினைத்ததை அடையலாம். காரியத்தில் வெற்றி கிடைக்கும். 5 முறை வலம் வந்தால் எடுத்த காரியம் வெற்றி பெறும். 9 முறை வலம் வர புத்திர பாக்கியம் கிடைக்கும். வம்சம் விருத்தியாகும்.
11 முறை வலம் வர சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். 108 முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலன் கிடைக்குமாம்.
இன்று சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசை நாள். அதே சமயம் சந்திரனுக்கு உரிய திங்கள்கிழமை.
அதனால் இன்று அரசமரத்தை சுற்றி வரும் போது
மூலதோ பிரம்ம ரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபினே
அக்ரத: சிவ ரூபாய
விருஷ ராஜயதே நம:
என்ற ஸ்லோகத்தை மனதிற்குள் சொல்லி அரசமரத்தை சுற்றி வர வேண்டும். அப்போது தங்களால் முடிந்த பழமோ வேறு பொருளையோ அரச மரத்தின் முன்னே சமர்ப்பிக்கலாம். 108 முறை வலம் வந்ததும் அவற்றைத் தானமாக அளிக்க வேண்டும்.
இது தான் அமாசோமவார விரதம். இன்றைய தினம் அன்னதானம் செய்யலாம். யாருக்காவது வஸ்திர தானமும் செய்யலாம். அதனால் மறக்காமல் இன்று அரசமரத்தை சுற்றி வந்து இனிமையான வாழ்வைப் பெறுங்கள்.
கிராமங்களில் அரசமரத்துக்கு அடியில் பிள்ளையார் சிலை, நாகர்சிலைகள் இருப்பதைப் பார்த்திருப்போம். அந்த மரத்தைச் சுற்றி அங்குள்ள விநாயகரையும், நாகர்சிலையையும் மக்கள் வழிபட்டு வருவதைக் காணலாம். அது ஒரு இயற்கை சூழந்த ரம்மியமான இடமாக இருக்கும்.
சில இடங்களில் பக்கத்தில் ஆற்றங்கரையும் இருக்கும். பொதுவாக அரசமரத்தைச் சுற்றினால் அது உடலுக்கு ஆரோக்கியம். அது மட்டுமல்லாமல் அங்குள்ள விநாயகரையும் வழிபட்டு வருவதால் நம் மனதுக்கும் அது நிம்மதியைத் தருகிறது. அதனால் இன்று வாய்ப்புள்ளவர்கள் அரசமரத்தைச் சுற்றி வழிபட்டு வந்து இறைவனின் அருளைப் பெறுங்கள்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



