ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்.. அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு

திருச்சி: மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்கும் விவாகரத்தில், நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியுடன் இணைக்க விரும்பவில்லை என்று அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார். தமிழக முதல்வர் கடந்த மாதம் மாவட்டம் வாரியாக கால்நடை…

Minister KN Nehru said that he did not want to forcefully merge the Panchayats with the Corporation

திருச்சி: மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்கும் விவாகரத்தில், நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியுடன் இணைக்க விரும்பவில்லை என்று அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார்.

தமிழக முதல்வர் கடந்த மாதம் மாவட்டம் வாரியாக கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 10 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் திருச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ ஊர்தி சேவையை, நேற்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி துறை அமைச்சர் கே.என்‌.நேரு , “திருச்சியில் மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் பணிகள் நடப்பதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் ரயில்வே நிர்வாகத்திடமிருந்து சில அனுமதிகள் பெற வேண்டியுள்ளது. அது தான் காலதாமதத்திற்கு காரணம். தமிழக அரசு பாலத்தைக் கட்டுவதற்கு தயாராக இருக்கிறது. இது குறித்து ரயில்வே கோட்ட மேலாளரிடம் மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார், விரைவில் பணிகள் முடிக்க உள்ளோம்.

இந்த மாதம் திருச்சியில் புதிய பேருந்து முனையம் தொடங்குவதாக கூறி கால அவகாசம் கொடுத்திருந்தோம். ஆனால், கூடுதலாக 100 கோடி ரூபாய்க்கான ரிவைஸ்டு எஸ்டிமேட் போடப்பட்டு, அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அதில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, உணவகங்கள் போன்றவை இருக்கும். எனவே டிசம்பருக்குள் திருச்சி புதிய பேருந்து முனைய கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி மழைநீர் அகற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடக்க உள்ளது. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அனைத்து பகுதிகளிலும் ஆகாய தாமரையை அகற்றி விட்டோம்.சென்னை மாநகராட்சியில் புதிதாக ரூ.22 கோடி மதிப்பில் எந்திரம் வாங்கி உள்ளோம். அந்த எந்திரத்தை பயன்படுத்தி அனைத்து வாய்க்காலிலும் தூர்வாரப்பட்டு வருகிறது. சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது எல்லா மாநகராட்சிகளிலும் வாய்க்காலை சுத்தப்படுத்த அறிவுறுத்தி இருக்கிறோம்.

மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் அனைத்து இடங்களிலும் முடிந்து விட்டது. 20 செ.மீ., 25 செ.மீ. மழை பெய்தால் எந்த வடிகாலுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கும். அங்கு மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் தேங்கினால் மோட்டார் வைத்து உடனே அகற்றப்படும். எல்லா சுரங்கப்பாதைகளையும் சுத்தம் செய்து விட்டோம் என்றார்.

ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைவதில் மறுப்பு தெரிவிப்பது குறித்து பேசிய கே.என்.நேரு, “யார் விருப்பப்படுகிறார்களோ, அவர்கள் திருச்சி மாநகராட்சியுடன் வந்து இணைந்து கொள்ளலாம். நாளுக்கு நாள் மாநகராட்சியின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதேநேரம், வெளி மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

எனவே, ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே பொதுமக்கள் வந்து குடியேறுவதற்கு ஏதுவாக அமையும். இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியுடன் இணைக்க விரும்பவில்லை. சமயபுரம், மண்ணச்சநல்லூர், மாந்துறை, லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளனர். அதில் இரண்டு கிராமங்களை மட்டும் சேர்க்க வேண்டாம் என்று கூறினார்கள். அதை வேண்டாம் என்று நாங்கள் நிராகரித்து விட்டோம் ” இவ்வாறு கூறினார்.