500 ரூபாய்க்கு கல்யாணத்தையே முடிச்ச ஐஏஎஸ் ஜோடி.. ஹனிமூன் கூட போகாம ரெண்டே நாளில் செஞ்ச விஷயம்..

By Ajith V

Published:

இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கான செலவு என்பதே ஆடம்பரமாக இருப்பதாக பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். ஒரு காலத்தில் எல்லாம் திருமணம் என்றால் மிக சிம்பிளாக புகைப்படம் எடுப்பது, நல்ல ஒரு திருமண மண்டபத்தை தேர்வு செய்து நல்ல உணவு வழங்கி உபசரிப்பது, திருமண பத்திரிக்கைகள் என முடிந்த வரை செலவுகளை திட்டம் போட்டு செயல்படுத்துவார்கள்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் ட்ரெண்டிங் என்ற வார்த்தைக்கு மத்தியில் இயங்கும் இந்த உலகத்தில் திருமணத்தையே அதிக பணம் செலவு செய்து உருவாக்கி வருகிறார்கள். மேலும் இனிமேல் திருமணம் என்றாலே இப்படி செலவு செய்ய வேண்டும் என பலரும் நினைக்கும் அளவுக்கு விஷயங்கள் இருந்து வருகிறது.

போட்டோ சூட் தொடங்கி திருமணத்தை சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையுமே அதிக பொருட்செலவில் தயார் செய்து ஹனிமூன் வரையில் வெளிநாடுகளை தேர்வு செய்து பிரமாண்டமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்கின்றனர். ஒரு பக்கம் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் இப்படியா பணத்தை செலவு செய்வது என விமர்சனங்களும் அதிகமாக உள்ளது.

அப்படி ஒரு சூழலில், ஐஏஎஸ் தம்பதியினர் வெறும் 500 ரூபாயில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக தங்களின் திருமணத்தையே முடித்த விஷயம், மிகப் பெரிய அளவில் தற்போது மீண்டும் கவனம் பெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் அல்வர் என்னும் பகுதியை சேர்ந்தவர் ஆஷிஷ் வஷிஷ்ட். பஞ்சாப் மாநிலம் ஜலாலாலாபாத் என்னும் பகுதியை சேர்ந்தவர் சலோனி சிதானா.

இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தில் இருந்து வந்த முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவார். கடந்த 2016 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், வெறும் 500 ரூபாயில் எந்த ஆடம்பரமும் இன்றி தங்களின் திருமணத்தையும் முடித்துள்ளனர். மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் இந்த திருமணம் நடந்திருந்தது.

மேலும் அந்த 500 ரூபாயும் திருமணத்தை பதிவு செய்யும் கட்டணமாக மட்டுமே இருந்துள்ளது. இவர்களின் திருமணம் பற்றிய செய்தி அதிக அளவில் வைரலானதால் அதன் பின்னர் ஆஷிஷ் மற்றும் சலோனி ஆகிய இருவருமே அதிகம் சமூக வலைத்தளங்களில் வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவில் இருந்த சூழலில் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் மருத்துவராக இருந்த சலோனி, பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தார். அத்துடன் வேறு எங்கேயும் செல்லாமல் திருமணம் முடிந்த இரண்டே நாளில் மீண்டும் பணிக்கும் திரும்பி இருந்ததும் பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஆஷிஷ் – சலோனி திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் திருமணம் குறித்த செய்தி மீண்டும் தற்போது வைரலாகி வரும் சூழலில், நிச்சயம் இன்று ஆடம்பமரமாக பணத்தை திருமணம் என்ற பெயரில் வீணடிக்கும் பலருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.