‘நடிகர் விஜய் கட்சிக்கு சென்று விடாமல் இளைஞர்களை தடுக்க வேண்டும்’.. திமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு பேச்சு

By Keerthana

Published:

திருவள்ளூர்: சினிமாவில் தோற்றவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துவிட்டனர் என்றும், நடிகர் விஜய் போன்ற நடிகர்களை அரசியலில் இளைஞர்கள் பின்தொடர்வதை தடுக்க வேண்டும் என்று திமுகவினருக்கு எம்.எல்.ஏ.க்கள் அறிவுறுத்தினளார்கள

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அருகே கிழக்கு ஒன்றிய தி.மு.க.பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி நாசர் எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர், பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்

இக்கூட்டத்தில் ஆவடி நாசர் பேசும்போது, மாவட்டச் செயலாளர் என்ற அகங்காரம் எனக்கு எப்பொழுதும் இருந்ததே கிடையாது. ஒரு தபால்காரரை போல் தான் நான் செயல்படுகிறேன். தலைமை சொல்வதை தொண்டர்களிடம் சொல்லுவேன். உங்களின் கோரிக்கைகளை தலைமையிடம் நான் நிச்சயம் சொல்லுவேன். கடந்த 43 ஆண்டுகளாக கட்சி தலைமையின் விசுவாசியாக இருந்து வருகிறேன். கட்சி தலைமை உத்தரவிட்டால் இளைஞர்களுக்காக வழிவிடும் விதமாக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை விட்டுக் கொடுத்து ஒதுங்கவும் தயாராக உள்ளேன்.

நம்முடைய இளைஞர்கள் அரசியலில் சினிமா நடிகர்கள் பின்னால் செல்வதை தடுக்க வேண்டும். சினிமாவில் தோற்றவர்கள் எல்லாம் தற்போது அரசியலுக்கு வந்துவிட்டனர். ஆடி, பாடி வீணாகப்போவதைவிட இளைஞர்கள் திராவிட இயக்க கொள்கையில் தங்களை இணைத்து கொண்டு தடம் புரளாமல் இருக்க வேண்டும்” இவ்வாறு கூறினார்.

அதனைத் தொடர்ந்து பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி பேசும்போது, நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சி 50 ஆண்டுகாலம் தொடர தி.மு.க.வினர் உழைக்க வேண்டும் எனவும், இளைஞர்களின் ஓட்டுகள் சினிமா மோகத்தால் நடிகர் விஜய் போன்ற கட்சிகளுக்கு சென்று விடாமல் தடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.