அனில் அம்பானி 5 வருடங்கள் பங்குச்சந்தை வர்த்தகம் செய்ய தடை.. பின்னணி என்ன?

அனில் அம்பானியின் நிறுவனம் உட்பட 24 நிறுவனங்கள் பங்கு சந்தையில் 5 ஆண்டுகள் வர்த்தகம் செய்ய தடை விதித்து செபி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம்…

anil ambani 1

அனில் அம்பானியின் நிறுவனம் உட்பட 24 நிறுவனங்கள் பங்கு சந்தையில் 5 ஆண்டுகள் வர்த்தகம் செய்ய தடை விதித்து செபி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் நிதி முறைகேடு செய்ததாக கண்டறியப்பட்டதை அடுத்து அவரது நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் உள்பட 24 நிறுவனங்கள் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனில் அம்பானிக்கு 25 கோடி அபராதம் செபி விதித்துள்ள நிலையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்தின் இயக்குனர் அல்லது முக்கிய பொறுப்பாளராக அனில் அம்பானி இருக்க முடியாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான கோடி கடன்கள் வழங்க அனுமதி அளித்திருப்பதாகவும், இதில் நிதி மோசடி நடந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் வாங்கியவர்கள் பெரும்பாலும் திருப்பி செலுத்தவில்லை என்று கூறியுள்ள செபி, இதன் காரணமாகத்தான் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தான் பெற்ற கடன்களையும் திருப்பி செலுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு 59 ரூபாய் 60 காசு என விற்பனையாகி வந்த நிலையில் 2020 மார்ச் மாதம் வெறும் 75 காசுக்கு சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மோசடி கொடுத்த தகவல் தெரிந்ததும் ஏராளமானோர் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியதால் தான் பங்குகள் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.