யார் கொட்டுக்காளி.. சூரியா? அன்னாபென்னா?.. கொட்டுக்காளி திரை விமர்சனம்..

By John A

Published:

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று வெற்றி வாகை சூடி இறுதியாக இன்று திரையரங்குளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் கொட்டுக்காளி. புரோட்டா சூரி விடுலை சூரி ஆனார். அதன்பின் கருடன் சூரி ஆனார். தற்போது கொட்டுக்காளி படத்தின் மூலம் கொட்டுக்காளி சூரி என்று இனி அறியும் அளவிற்கு நடிப்பில் மிகச்சிறந்த தேர்ச்சி பெற்று முத்திரையைப் பதித்திருக்கிறார் சூரி.

படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன். ஏற்கனவே விஜய் சேதுபதி கடைசி விவசாயி என்ற ஒரு வித்தியாசமான படைப்பினைக் கொடுத்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயனும் தரமான திரைப்படத்தினைத் தயாரித்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் எந்த ஆரவாரம், பின்னனி இசை, பாடல்கள் என இசையே இல்லாதது தான். இப்படியும் படம் எடுக்க முடியுமா என வெளிநாட்டு திரைப்பட பாணியில் இயக்கியிருக்கிறார் இயக்குநர் வினோத் ராஜ்.

ஏற்கனவே கூழாங்கல் என்ற படைப்பின் மூலம் ஆஸ்கர் பரிந்துரை வரை சென்றவர் தற்போது கொட்டுக்காளி மூலம் உலக சினிமாக்களில் பங்கெடுத்து தன்னுடைய படைப்பிற்கு அர்த்தம் சேர்த்திருக்கிறார். பாண்டியாக சூரி, மீனாவாக மலையாள நடிகை அன்னாபென். முறைமாமனான பாண்டிக்கு மீனாவை பள்ளிப் படிப்பு முடிந்ததும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்நிலையில் பாண்டி அவரை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறார். கல்லூரியில் இன்னொருவர் மேல் காதல் வருகிறது.

இந்த நிலையில் இந்த விஷயம் தெரிந்த குடும்பத்தார் அவருக்குப் பேய் பிடித்துவிட்டது என எண்ணி குல தெய்வம் கோவிலுக்கும், சாமியாரிடமும் அழைத்துச் செல்கின்றனர். அங்கு என்னநடந்தது. பேய் ஓட்டப்பட்டு பாண்டி திருமணம் கை கூடியதா என்பதை வெறும் 1.40 நிமிடத்தில் ஒரு சிறிய கவிதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் வினோத் ராஜ். பேய் ஓட்டப் போக அன்னாபென்னை ஆட்டோவில் அழைத்துச் செல்லும் போது இடையே நடக்கும் உரையாடல்கள்தான் படமே.

வாழை திரைப்படம் எப்படி இருக்கு? வலியை அழுத்தமாகப் பதிவு செய்த மாரிசெல்வராஜ்

சூரி, அன்னாபென்னைத் தவிர அனைத்தும் புதுமுகங்கள்.ஆனால் புதுமுகங்கள் என்று தெரியாதவாறு அத்தனைபேரையும் யதார்த்தமாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். எத்தனையோ பயணங்கள் குறித்த படம் வந்திருந்தாலும் இந்தப் படம் அத்தனையிலும் மாறுபடுகிறது. இயல்பாக நடக்கும் சண்டை, காற்றின் இசை, சேவல் கூவும் ஒலி என அனைத்துமே லைவ் ரெக்கார்டிங் தான். இந்தப் படத்துக்கு இசை இல்லாத குறையை சூரனும், கூத்தனும் நிவர்த்தி செய்திருக்கிறார்கள்.

படத்தில் அன்னாபென்னுக்கு அதிகம் வசனங்கள் இல்லையென்றாலும் படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார். கொட்டுக்காளியாக அவர் செய்யும் ரியாக்ஷன்கள் மொத்த படத்தையும் தாங்கியிருக்கிறது. சூரிக்கு இந்தப் படம் ஹாட்ரிக் வெற்றியைத் தந்ததா இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும்.