தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். இன்று பதவியேற்றார். தமிழகத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பல துறைகளில் பழுத்த அனுபவம் கொண்ட முருகானந்தம் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர். ஆகியோரின் பாராட்டுதலைப் பெற்றவர்.
1991-ம் ஐ.ஏ.எஸ் பேட்ஜ் அதிகாரியான முருகானந்தம் தேர்வு எழுதி நேரடியாக ஐ.ஏ.ஏஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயலாளர் முருகானந்தம் முதுகலைக் கணிணி அறிவியல் பட்டம் பெற்றவர். மேலும் லக்னோ ஐஐஎம்-ல் எம்.பி.ஏ பட்டமும் பெற்றவர்.
கடந்த 2001 முதல் 2004 வரை கோவை மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணியாற்றிய முருகானந்தம் அதன்பின் முதல்வரின் தனிச் செயலாளராகவும் பணியாற்றினார். மேலும் கொரோனோ பணிகளை விழுப்புரம் மாவட்டத்தில் திறம்படச் செய்தார்.
அதன்பின் நிதித் துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக முருகானந்தம் நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் வகித்த போது அமைச்சரின் பாராட்டைப் பெற்றார். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்போற்று தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டை தயார் செய்தது இவர்தான்.
மேலும் எடப்படி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது தொழில் துறை செயலாளராகவும் பதவி வகித்தார். இன்று தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளராகப் பதவியேற்றிருக்கும் முருகானந்தத்துக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.