சென்னை: இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ. 976 கோடி ஒதுக்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இன்று வெளியிடப்பட்டுள்ள முழு பட்ஜெட்டில் பிங்க் புத்தகத்தில் அத்தொகை ரூ. 301 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு வெறும் 1000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டில் இரட்டைப்பாதை திட்டங்களுக்கு ரூ 2,214 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ரூ. 1,928 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தடங்களான திண்டிவனம் – செஞ்சி- திருவண்ணாமலை வழித்தடத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அத்திப்பட்டு- புத்துருக்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம்- நகரிக்கு ரூ. 350 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது 153 கோடி தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் ஈரோடு பழனிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை- மகாபலிபுரம்- கடலூர் கடற்கரை பாதைக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்போது வெறும் ரூ. 18 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை -ஆவடி லைனுக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மொரப்பூர் – தர்மபுரிக்கு ரூ.115 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ரூ.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல இரட்டை பாதை திட்டங்களில் காட்பாடி – விழுப்புரத்துக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் சேலம் -கரூர்- திண்டுக்கல் இரட்டை பாதைக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்த அறிவித்திருந்த மத்திய அரசு தற்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கி உள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது, ஈரோடு -கரூர் இரட்டை பாதைக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தாக கூறிய மத்திய அரசு, இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கி உள்ளது.
இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதியும் பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுபட்ஜெட்டில் சென்னை மெட்ரோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு எந்த நிதியும் கிடைக்காதநிலையில், இப்பொழுது ரயில்வேயின் புதிய வழித்தடங்கள் அனைத்துக்கும் நிதி ஒதுக்கப்படாதது எதிர்க்கட்சிகளை கடும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது..