சின்னத்திரை சித்ரா தற்கொலை வழக்கில் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் உள்பட ஏழு பேர்கள் நிலை என்ன என்பதை பார்ப்போம்.
’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்த சின்னத்திரை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு பூந்தமல்லி அருகே நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தபோது திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது அவருடன் அவருடைய கணவர் ஹேம்நாத்தும் தங்கியிருந்ததால் சித்ராவின் தற்கொலைக்கு அவர்தான் தூண்டுதலாக இருந்ததாக சித்ராவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சில மாதங்களுக்கு பின் ஹேம்நாத் ஜாமீனில் வெளிவந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேமநாத் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார். இதனால் ஹேம்நாத் உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பை கேட்ட நடிகை சித்ராவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஒப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.