ஒரு கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் ஒன்றைச் சுட்டிக்காட்டி பதிலைத் தௌ;ளத் தெளிவாகக்கூறுவது பெரியோர் இயல்பு. அதாவது ஒரு நல்ல கருத்தை உடனே மனம் ஏற்றுக்கொள்ளாது. வாழைப்பழத்தில் ஊசியை மெதுவாக சொருகுவது போன்று சொன்னால் தான் ஏற்றுக்கொள்ளும்.
அதே போலத் தான் அட்வைஸ்சும். அது இன்றைய இளைஞர்களுக்கு வேப்பங்காயாக கசக்கும். இவர் என்ன சொல்றது? நாம என்ன செய்றதுன்னு வீம்பு பிடிப்பார்கள். அவர் சொல்வது சரியாகவே இருந்தாலும் நக்கல், கிண்டல் என கலாய்த்து அதில் சுகம் காண்பார்கள். அதனாலேயே பலரும் அறிவுரை கூறத் தயங்குகிறார்கள்.
ஆனால் அன்றைய காலத்தில் அப்படி அல்ல. பெரியவங்க என்ன சொன்னாலும் அதை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு கேட்கும் பழக்கம் இருந்தது. அதனால் அவர்களது பிள்ளைகளும் அதன்வழி நடந்து வாழக்கையில் நல்ல நிலைக்கு வந்தார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் சினிமாவிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. வாங்க என்னன்னு பார்ப்போம்.
குழந்தையும் தெய்வமும் திரைப்படம் தயாராகிக் கொண்டு இருந்த காலகட்டத்திலே ஏறக்குறைய அதே கதை அமைப்பைக் கொண்ட படத்தை சின்ன அண்ணாமலை தயாரித்துக் கொண்டு இருந்தார். அந்தப் படம் வேகமா உருவாகிக் கொண்டு இருந்ததால அந்தப் படத்திற்கு முன்னதாக இந்தப் படத்தை வெளியிட்டால் நல்லாருக்கும்னு தனது தந்தையான ஏவிஎம்.மெய்யப்பச் செட்டியாரிடம் சரவணன் சொன்னார்.
‘ஒரு படம் நல்ல படமா இருந்தால் எந்தக் காலகட்டத்திலும் மக்கள் அதை ரசிப்பாங்க. அந்தப்படமும், இந்தப்படமும் ஒரே கதைங்கறதால நாம அவசரம் அவசரமாக படப்பிடிப்பை நடத்திப் படத்தை வெளியிடணும்னு எந்த அவசியமும் இல்லை.
உதாரணத்திற்கு ஒரு விஷயத்தை நான் உங்கிட்ட சொல்றேன். ராமாயணம் கதையை எத்தனை நாள்களாக நாம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். எத்தனை முறை மேடைகளில் அதை சொல்லி இருக்காங்க. எத்தனை முறை படமாகி இருக்கு. ஆனாலும் இன்றைக்கும் ராமாயணம் கதையை நாடெங்கிலும் பலரும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இன்றைக்கும் ராமாயண கதை படமாகிக் கொண்டு தான் இருக்குன்னா அதுக்கு என்ன அர்த்தம்? சொல்ல வேண்டிய முறையில் சொன்னா எந்தக் காலகட்டத்திலும் அதற்கு ரசிகர்கள் இருப்பார்கள் என்பது தான் அர்த்தம்’ என்றார் மெய்யப்ப செட்டியார்.
அதே போலத் தான் அந்தகன் படம் பல மொழிகளில் வெளியாகி இருந்தாலும் தமிழ் மொழியிலே அதை எப்படி படமாக்கி இருப்பார்கள் என்பதை நிச்சயம் பார்க்க ஒரு கூட்டம் வரும் என்பது தான் என்னுடைய நம்பிக்கை. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.