மனித மூளையில் சிப் பொருத்தும் நியூராலிங்க் என்ற டெக்னாலஜியை எலான் மஸ்க் நிறுவனம் சோதனை செய்து வரும் நிலையில் ஏற்கனவே ஒரு மனிதருக்கு மூளையில் சிப் பொருத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது நபருக்கு மூளையில் சிப் பொருத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்கின் நிறுவனம் மனித மூளைக்கும் கம்ப்யூட்டருக்கும் தொடர்பை உருவாக்கும் சிப் ஒன்றை உருவாக்கி உள்ளது என்பதும் இந்த முதலில் குரங்குகளுக்கு சோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் மனிதர்களுக்கும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் நியூராலிங்க் சிப், விபத்தில் தோள்பட்டை செயலிழந்த ஒருவருக்கு பொருத்தப்பட்ட நிலையில் அவர் குணமாகியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இரண்டாவது ஆக முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ள ஒருவருக்கு சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவருடைய உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேற்கண்ட இரண்டு நபர்களைப் போலவே மாற்றுத்திறனாளி உள்பட பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு நியூராலஜி பொருத்துவதன் மூலம் பயன் அடைவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
மூளையில் நியூராலிங்க் சிப் பொருத்தப்பட்டால் மனிதர்களின் திறன் அதிகரிக்கும் என்றும் சூப்பர் மேன் பவர் கிடைக்கும் என்றும் இந்த தொழில்நுட்பம் மூலம் தங்களது எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியும் என்றும் எலான் மஸ்க் தனது சமூக வலைத்தளத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உடல் உபாதை உள்ளவர்கள் மட்டுமின்றி உடல் உபாதை இல்லாதவர்களும் இந்த சிப்பை பொருத்தி கொள்ளலாம் என்றும் அனைத்து மனிதர்களுக்கும் இந்த சிப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் எலான் மஸ் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த சிப் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருப்பதால் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தகவலை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் எதிர்காலத்தில் செல்போன் இல்லாமலே ஒருவருக்கொருவர் தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் இன்னும் எட்டு பேருக்கு நியூராலிங்க் சிப் பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் மனிதர்கள் அனைவருக்கும் இந்த சிப் பொருத்தப்பட்டால் செல்போன் என்பதன் தேவையே இருக்காது என்றும் சிப் மூலமே நமது எண்ணங்களை மற்றவர்களிடம் பரிமாறிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.