சென்னை: சென்னையில் பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரத்தில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரத்தில் ஏராளமான மக்கள் குவிந்ததால் பேருந்து நிலையமே நெருக்கடிக்குள்ளானது. இதனால் தாம்பரம் பஸ் நிலையம் முழுவதும் நிற்பதற்கு இடம் இல்லாத அளவிற்கு பயணிகள் கூட்டம் நிரம்பியது.
சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயிலை பாதுகாப்பாக இயக்க அவ்வபோது ரயில் நிலையங்களில் அவ்வப்போது பராமரிப்பு பணி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், தாம்பரம் பணிமனையில் தண்டவாள பராமரிப்பு பணி கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அதற்காக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில், ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் வருகிற 14-ம் தேதி வரை பகல் மற்றும் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது.. அதன்படி நேற்று காலை 9.20 மணி முதல் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, 15 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. அந்த சிறப்பு ரயில்கள் சென்னை கடற்கரை – பல்லாவரம், கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்டு வருகின்றன. பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே முழுவதுமாக மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் ரயில் நிலையம் காலை 9 மணிக்கு மேல் வெறிச்சோடி காணப்பட்டது. ரயில் நிலையத்திற்கு பதிலாக பயணிகள் கூட்டம் கூட்டமாக தாம்பரம் பஸ் நிலையத்தை நோக்கி படையெடுத்தனர்.
மேலும், நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏற்கனவே தாம்பரத்தில் இருந்து எழும்பூர், கடற்கரை, சென்டிரல் வருவதற்காக தாம்பரம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமானது. வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் தாம்பரம் பஸ் நிலையம் வந்த காரணத்தால் தாம்பரம் பஸ் நிலையத்தில் நிற்பதற்கு இடம் இல்லாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.
அதேநேரம் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகளின் நலனுக்காக பல்லாவரத்தில் இருந்து செங்ல்பட்டிற்கு 50 கூடுதல் பஸ்களும், தாம்பரத்தில் இருந்து தியாகராய நகர், பிராட்வே ஆகிய பகுதிகளுக்கு கூடுதலாக 20 பஸ்களும் இயக்கப்பட்டன. கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டாலும், பயணிகள் கூட்டம் அதிமாக காணப்பட்டதால், ஒவ்வொரு பஸ்களிலும் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள். ஒரே நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டதால் தாம்பரம் ஜி எஸ் டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதி அடைக்குள்ளாகினர் .
பகல் நேரங்களில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் நலனுக்காக பராமரிப்பு பணிகளை இரவு நேரங்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.. பகல் நேரத்தில் ரெயில்களை ரத்து செய்யப்பட்டால் அதிகமாக பயணிகள் செல்லும் இடத்திற்கு வழக்கத்தை விட கூடுதலாக பஸ் வசதி ஏற்படுத்திதர வேண்டும் என்றும் பல்லாவரம் ரயில் நிலையத்தில் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்தனர்.