ஆடி அமாவாசை அன்று திதி கொடுக்கும்போது சூரியனை வணங்குவது ஏன்னு தெரியுமா?

By Sankar Velu

Published:

ஆடி அமாவாசை அன்று நாம் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமை ரொம்ப ரொம்ப முக்கியம். பெற்றோருக்கு உயிரோடு செய்ய வேண்டிய கடமையை நாம் கட்டாயம் செய்ய வேண்டும். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அதைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

அதைப் போல அவர்களின் மறைவுக்குப் பிறகும் அவர்களுக்குத் திதி கொடுக்கும் கடமையைக் கட்டாயம் செய்ய வேண்டும். இது எதனால் என்றால் முன்னோர்களின் அருள் நமக்கு இருந்தால் நமக்கு தெய்வங்களின் அருளும் கண்டிப்பாகக் கிடைக்கும்.

நமக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் தான் நம் முன்னோர்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது நமது கடமை. அந்தவகையில் ஆடி அமாவாசை அன்று எளிமையான முறையில் வழிபாடு செய்து நாம் மிகப்பெரிய பலன்களை அடைய முடியும்.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை 4.8.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வருகிறது. அமாவாசையானது 3.8.2024 அன்று மாலை 4.56 மணி முதல் 4.8.2024 அன்று மாலை 5.32 மணி வரை வருகிறது. தர்ப்பணம் செய்வதற்கான நேரம் 4.8.2024 அன்று காலை 6 மணி முதல் பகல் 11.55 மணி வரை. இலை போட்டு படையலிட்டு வழிபட நேரம் மதியம் 12 மணிக்குள் அல்லது 1.35 மணிக்கு மேல் செய்யலாம்.

இந்த ஆண்டு நமக்கு சிறப்பாக ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பொதுவாக நாம் ஆதித்ய பகவானை நோக்கித் தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதனால் தான் தர்ப்பணத்திற்கான நேரமே சூரிய உதயத்திற்குப் பிறகு தான் செய்ய வேண்டும்.

அதன்பிறகு சூரியன் உச்சியில் இருக்கும் வரை செய்யலாம். தர்ப்பணம் செய்யும்போது சூரியனைப் பார்த்து கும்பிட்டு அவரிடம் நாம் வேண்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் தான் இதற்கு அதிபதியாக இருந்து முன்னோர்களின் அருளை நமக்கு வாங்கித் தரக்கூடிய கடவுள்.

அதனால் அந்த பித்ரு தோஷங்களை எல்லாம் நாம் நிவர்த்தி செய்து கொள்வதற்கு ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசை அதிவிசேஷமானது. இரட்டிப்புப் பலன் தரக்கூடியது.

பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமை அன்று தானதர்மம், அன்னதானம் செய்வது பித்ரு தோஷங்களை நீக்கும். நமது முன்னோர்களின் அன்பும், அருளும், ஆசியும் இல்லை எனில் நமது வாழ்க்கையில் பல தடைகள் இருக்கும். அதுக்குத் தான் பித்ரு தோஷம், பித்ரு சாபம்னு சொல்வாங்க. மரண தருவாயில் எவ்வளவு விரோதியாக இருந்தாலும் அவர்களைக் கூப்பிட்டு நாலு வார்த்தைப் பேசுவாங்க.

அவர்கள் கடைசியாக சாபம் கொடுத்தால் அமாவாசை அன்று தான் அவர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து குளிர்விக்கணும். அதனால் தான் பெரியவர்கள் பேசும்போது நிதானமாகப் பேச வேண்டும். அவர்களை சந்தோஷப்படுத்தவே இந்த அமாவாசை தான் மிக மிக முக்கியமான நாள்.

அதனால் திதி கொடுக்க மறந்துடாதீங்க. கடல், ஆறு என நீர் நிறைந்த இடங்களிலும், கோவில்களிலும் அந்தணர்கள் மூலம் செய்து கொள்ளலாம். கடல், நதி சார்ந்த ஆலயங்களில் நீராடி தர்ப்பணம் கொடுப்பது அதி விசேஷமானது.

Aadi Amavasai
Aadi Amavasai

இவற்றில் எள்ளும், தண்ணீரும் இறைப்பதே மிக மிக முக்கியம். எங்கும் போக முடியாதவர்கள் எளிமையான முறையில் வீட்டில் இருந்தபடியே எள்ளும், தண்ணீரும் வைத்து யாரும் கால் படாத இடத்தில் இறைத்துக்கொள்ளலாம். அன்றைய நாளில் யாருக்காவது அன்னதானம் செய்வது மிக மிக முக்கியம்.

அன்றைய தினம் காக்கைக்கு உணவிடுவது சிறப்பான பலன்களைத் தரும். நாம அன்னதானம் தந்தால் உங்களது முன்னோர்கள் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து பெற்றுக்கொள்வார்களாம். அதனால் உங்களால் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.