இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. டி20 தொடரில் கொஞ்சம் கூட ஆதிக்கம் செலுத்த முடியாமல் அதனை இழந்திருந்த இலங்கை அணி, பரிதாபமான நிலையில் நிறைய விமர்சனங்களையும் சந்தித்திருந்தது.
பவுலிங்கில் 3 டி20 போட்டிகளிலும் சொதப்பி இருந்த இலங்கை அணி, பேட்டிங்கிலும் முதல் 3 வீரர்களை மட்டுமே நம்பி இருந்தது. அதிலும் கடைசி டி20 போட்டியில் கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தும் 30 பந்துகளில் 30 ரன்கள் கூட எடுக்க முடியாமல் மிக கேவலமான நிலையில் தோல்வி அடைந்திருந்தது. அதுவும் ஒரு காலத்தில் கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்திய வீரர்கள் அடங்கிய இலங்கை அணி, இப்படி மோசமாக தோல்வி அடைந்தது பெரிய அளவில் விமர்சனத்திற்கும் காரணமாக அமைந்திருந்தது.
இதனால், இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் அவர்களை எதிர்கொண்டு ஆகியிருந்தது இலங்கை அணி. முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கொலம்போ மைதானம் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கடினமாக இருந்ததால் ஆரம்பத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் சிக்கி விக்கெட்டுகளை இலங்கை பறிகொடுத்தது.
ஆனாலும் பத்தும் நிஷாங்கா மற்றும் வெல்லாலகே உள்ளிட்ட வீரர்கள் அரை சதமடித்ததால் இலங்கை அணி 230 ரன்கள் சேர்த்திருந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் ஆடும் ரோஹித் ஷர்மா, அசத்தலாக ஆடி ரன் சேர்த்திருந்தார்.
அதுவும் முதல் ஓவரின் 2 வது பந்திலேயே சிக்சருக்கு பறக்க விட்டு இலங்கை அணியையும் மிரட்டி இருந்தார். தொடர்ந்து அதே அதிரடியை அவுட்டாவது வரை காட்டி இருந்த கேப்டன் ரோஹித் ஷர்மா, 47 பந்துகளில் 7 ஃபோர்கள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்திருந்தார். இதனால், இந்திய அணியும் ரன்னும் வேகமாக உயர்ந்தது.
ஆனால், அவர் அவுட்டான பின்னர் அடுத்தடுத்து முக்கியமான விக்கெட்டுகள் விழ, ஒரு தடுமாற்றத்தை தான் இந்திய அணி கண்டிருந்தது. இதனிடையே, ஒரு தொடக்க வீரராக ரோஹித் ஷர்மா சர்வதேச அரங்கில் படைத்த மிக முக்கியமான சாதனை ஒன்றை பற்றி தற்போது பார்க்கலாம்.
இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கி நிறைய சர்வதேச ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் சேவாக் உள்ளார் (16119 ரன்கள்). இவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 15335 ரன்களும் எடுத்திருந்த நிலையில், தற்போது 3 வது வீரராக ரோஹித் ஷர்மா 15,000 ரன்களை எடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல், சர்வதேச அரங்கில் 15,000 ரன்களை வேகமாக எட்டிய 2 வது தொடக்க வீரர் என்ற பெருமையையும் ரோஹித் பெற்றுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 331 இன்னிங்ஸ்களில் 15,000 ரன்களை ஒரு தொடக்க வீரராக எட்டியிருந்த நிலையில், அவரை தொடர்ந்து ரோஹித் ஷர்மா தற்போது 15,000 ரன்களை 351 இன்னிங்சில் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.