இன்போசிஸ் நிறுவனம் 32,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி அமைப்பு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் கடந்த 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 32,403 கோடி ரூபாய் அளவில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இன்போசிஸ் நிறுவனத்திற்கு மட்டுமின்றி வேறு சில நிறுவனங்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த சில நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளை வைத்துள்ள நிலையில் வெளிநாட்டில் உள்ள நிறுவனத்திற்காக செய்யும் செலவுக்கு இந்தியாவில் வரி செலுத்த தேவையில்லை என்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
ஆனால் இந்தியாவில் உள்ள நிறுவனம் வெளிநாட்டில் உள்ள தன்னுடைய கிளை அலுவலகத்தில் இருந்து சேவை பெற்றால் அதற்கு இன்வாய்ஸ் எழுப்ப வேண்டும் என்றும் அதற்கான ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்றும் ஜிஎஸ்டி அமைப்பை தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு பதில் அனுப்பி உள்ள இன்போசிஸ் வெளிநாட்டு கிளைகள் இந்தியாவில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு செய்யும் சேவைகள் ஜிஎஸ்டிக்கு வரம்புக்குள் வராது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
இதனை அடுத்து தற்போது வரி ஏய்ப்பு தொடர்பாக அனுப்பிய நோட்டீசை கர்நாடக மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்த தகவலை இன்போசிஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரிடமும் இன்போசிஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.