ஆடிக்கிருத்திகை உருவான வரலாறு… இன்னைக்கு வழிபட்டால் கண்டிப்பாக நடக்குமாமே..!

By Sankar Velu

Published:

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தைப் பற்றிப் பார்ப்போம். முருகப்பெருமானுக்கு மிக முக்கியமான நட்சத்திரம் என்றால் அது கிருத்திகை தான். முருகப்பெருமானின் அவதாரத்தைப் பெருமைப்படுத்தி தாலாட்டி சீராட்டி வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள்.

6 முகமாக இருந்த முருகப்பெருமான் 6 கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தார். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து அவதாரம் செய்த போது 1008 இதழ் அடுக்கு தாமரையில் முருகப்பெருமான் அற்புதமாக குழந்தையாக உதித்தார். அப்படி உதித்த அந்த முருகப்பெருமானை சிவபெருமான் அந்தக் கார்த்திகைப் பெண்களிடம் வளருங்கள் என்று சொல்கிறார். உடனே அவர்கள் குழந்தையை வளர்க்கப் போட்டிப் போட்டுக்கொண்டு ஓடுகின்றனர்.

அவர்கள் தொட்டதும் அது 6 குழந்தையாக மாறிப்போனது. எல்லாரும் அந்தக் குழந்தையை வளர்க்கிறார்கள். அதைப் பார்த்து அன்னை பார்வதிக்கு அவ்வளவு சந்தோஷம். அந்தக் 6 குழந்தைகளும் ஓடி வந்து அன்னை பார்வதியிடம் நிற்கின்றன.

Karthigai pengal
Karthigai pengal

அன்னை அந்த 6 குழந்தைகளையும் ஒன்றாக கட்டி அணைக்கிறாள். ஆறும் ஒன்றாகி ஒரு ரூபமாகிறது. ஒன்றுபட்டதால் அவனுக்குக் கந்தன் என்று பெயர் வந்தது. அப்போது அன்னை கார்த்திகைப் பெண்களே நீங்கள் இந்தக் குழந்தைகளை வளர்த்ததால் உங்கள் பெயரே முருகனுக்கு சிறப்பானதாக விளங்கும் என்கிறார். அதனால் தான் முருகனுக்குக் கார்த்திகேயன் என்ற பெயர் வந்தது.

இனிமேல் நீங்கள் நட்சத்திரங்களாக இருந்து முருகனை வழிபாடு செய்யக்கூடியவர்கள். உங்கள் நட்சத்திரம் அன்று முருகனை வழிபாடு செய்தால் அவர்கள் வேண்டியதை கந்தன் நிறைவேற்றி வைப்பான் என்கிறார் சிவபெருமான். ஆறு கார்த்திகைப் பெண்களும் வானில் 6 நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். அந்த அருமையான கார்த்திகைப் பெண்களின் ஞாபகத்திற்காகத் தான் நாம் இன்றும் முருகப்பெருமானைக் கார்த்திகை நட்சத்திரத்து அன்று முருகப்பெருமானை வழிபடுகிறோம்.

ஆடிக்கிருத்திகை அன்று உயரிய பதவி வேண்டும், குழந்தை வேண்டும், திருமணம், தலைமைத்துவப் பண்பு, வாழ்க்கையில் வரும் பல பிரச்சனைகள் என சகல காரியங்களும் நிறைவேற விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடலாம். பரணியோடு சேர்த்துக் கார்த்திகைக்கு விரதம் இருப்பது தான் முறை. நீர் ஆகாரம், பழச்சாறுகளாக எடுத்து விரதம் இருக்கலாம். கார்த்திகை காலை உபவாசம், மதியம் உபவாசம் இருந்து மாலை விரதத்தை விடுத்து வழிபடலாம்.

இன்றும், நாளையும் கிருத்திகை உள்ளது. 29ம் தேதி சில கோவில்களிலும் , 30ம் தேதி சில கோவில்களிலும் கிருத்திகைக் கொண்டாடப்படுகிறது. 29ம் தேதி திருத்தணியிலும், 30ம் தேதி திருச்செந்தூரிலும் கொண்டாடப்படுகிறது. 29ம் தேதி மதியம் 2.41மணிக்கு ஆரம்பித்து 30ம் தேதி மதியம் 1.40 மணி வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது.

பரணியில் இருந்து விரதம் இருக்க முடியாதவர்கள் 30ம் தேதி மட்டும் விரதம் இருந்து வழிபடலாம். முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய தேன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். சற்கோண தீபம் ஏற்றுவது சிறப்பு. நெய் அகல் விளக்கு ஏற்றுவது நல்லது. முருகப்பெருமானின் பாடல்களைப் பாராயணம் செய்யலாம். மேற்கண்ட தகவல்களை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.