தமிழ்த்திரை உலகில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுபவர் பாரதிராஜா. கிராமத்து மண் வாசனை கமழ கமழ திரைப்படம் எடுப்பதில் வல்லவர் இவர். அந்த வகையில் இவர் எடுத்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் தான்.
மண்வாசனை, கிழக்கே போகும் ரயில், காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், பதினாறு வயதினிலே, முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே ஆகிய படங்களைப் பார்த்தால் பாரதிராஜாவின் மண்வாசனை எவ்வளவு சுவாரசியமானது என்று தெரியும். கிராமிய மண்ணின் மணத்தை ஒரு அழகியலாகக் காட்டுவார்.
இவர் திரைத்துறைக்கு வந்தது எப்படி? இயக்குனராவதற்கு முன்பு பாரதிராஜா என்னவெல்லாம் சொன்னார் என்பது போன்ற பல சுவாரசியமான தகவல்களை தயாரிப்பாளரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். வாங்க என்னன்னு பார்ப்போம்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த ‘இதயக்கனி’ உள்பட பல முக்கியமான திரைப்படங்களை இயக்கியவர் ஏ.ஜெகந்நாதன். அவரது இயக்கத்தில் உருவான படம் தான் அதிர்ஷ்டம் அழைக்கிறது. அந்தப் படத்தில் உதவியாளராக பாரதிராஜா பணியாற்றிக் கொண்டு இருந்தார்.
அந்தப் படத்திற்குப் பத்திரிகைத் தொடர்பாளனாக நான் பணியாற்றிக் கொண்டு இருந்தேன். அந்தப் படத்திற்கான செய்திகளைத் தர வேண்டும் என்பதற்காக படப்பிடிப்புக்குச் செல்வது வழக்கம்.
அப்போது எந்தக் காட்சிகளைப் படமாக்கினார்கள் என்பது போன்ற விவரங்களை எல்லாம் பாரதிராஜாவிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்வேன். பொதுவாக யாரிடம் கேட்டாலும் இன்று இந்தக் காட்சி படமானது என்று தான் சொல்வார்கள். ஆனால் பாரதிராஜா அப்படி அல்ல. இந்தக் காட்சியை இப்படி படமாக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்வார்.
படமாக்கப்பட்டதாக அவர் சொன்ன காட்சிக்கும், எப்படி படமாக்க வேண்டும் என்று பாரதிராஜா சொன்ன காட்சிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. அப்போது தான் இந்த மனிதரிடம் ஏதோ ஒரு பொறி இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. இவர் உதவி இயக்குனராகவே காலத்தைக் கழித்து விடுபவர் அல்ல.
நிச்சயமாக என்றாவது ஒருநாள் பெரிய இயக்குனராக வருவார் என்று நான் நினைத்தேன். ஆனால் இந்தளவுக்குத் தமிழ்சினிமாவையே புரட்டிப் போடும் இயக்குனராக வருவார் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.