டி20 உலக கோப்பை பைனலில் இதுவரை 173 தான் அதிகபட்ச ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 176 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் இலக்காக கொடுத்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டி20 கிரிக்கெட் இறுதி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்த நிலையில் தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சியை அளித்தது.
கேப்டன் ரோகித் சர்மா வெறும் 9 ரன்களில் அவுட் ஆன நிலையில் அதன்பின் களமிறங்கிய ரிஷப் பண்ட் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனையடுத்து நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் களமிறங்கிய நிலையில் அவரும் 3 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதனை அடுத்து விராட் கோலி மற்றும் அக்சர் பட்டேல் ஜோடி தான் ஓரளவு நிலைத்து ஆடியது. விராட் கோலி 76 ரன்களும் அக்சர்பட்டேல் 47 ரன்கள் எடுத்த நிலையில் 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலககோப்பை இறுதி போட்டி நடைபெற்ற போது 173 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கப்பட்டது. இதுதான் உலக கோப்பை பைனலில் அதிகபட்ச இலக்கு ரன்களாக இருந்த நிலையில் இன்று 177 ரன்கள் தென்னாபிரிக்கா அணிக்கு இலக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் அதனை எட்டுவாரர்களா? அல்லது இந்திய அணி தென்னாப்பிரிக்க வீரர்களை சுருட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தென் ஆப்பிரிக்கா அணியை பொருத்தவரை குவிண்டன் டீகாக், மார்க்கம், ஹென்ட்ரிக்ஸ், கிளாசன், டேவிட் மில்லர் ஆகிய அபாரமான பேட்ஸ்மேன்கள் உள்ளனர் .அதேபோல் இந்தியாவில் பும்ரா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் ஆகிய அபாரமான பவுலர்கள் உள்ளனர். இன்னும் சில நிமிடங்களில் உலக கோப்பை யாருக்கு என்பது தெரிந்துவிடும், அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.