காஞ்சிபுரத்தில் 6 மாதமாக வீட்டு வாடகை பாக்கி.. வீட்டு உரிமையாளர் செய்த பெரிய சம்பவம்

By Keerthana

Published:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 6 மாதமாக வீட்டு வாடகை கொடுக்காததால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் வாடகை வீட்டின் மாடிப்படிகளை இடித்து தள்ளி, மின் இணைப்பையும் துண்டித்து விட்டார். இதனால் அந்த வாடகை வீட்டில் வசித்தவர்கள் பல மணிநேரம் வெளியே வர முடியாமல் தவித்து போனார்கள்.

காஞ்சிபுரத்தில் வீட்டை காலி செய்ய மறுத்ததுடன், ஆறு மாதமாக வாடகை கொடுக்காமல் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய வாடகை தாரரை பழிவாங்க முடிவு செய்த வீட்டின் உரிமையாளர் வித்தியாசமான முறையில் பழி வாங்கி உள்ளார். அதற்காக அவர் செய்தது தான் உச்சகட்ட சம்பவம். தன் சொந்த வீட்டின் படிக்கெட்டையே இடித்து வாடகைதாரர்கள் வெளியேறுவதற்கான வழிகளை மொத்தமாக காலி செய்தார். இதனால் வாடகைக்கு வீட்டில் குடியிருந்தவர்கள் ஆளைவிட்டால் போதும் எப்படியாவது காப்பாற்றி வெளியே கொண்டு செல்லுங்கள் என்று போலீசின் 100க்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

காஞ்சீபுரம் விளக்கடி பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமாக வீடு இருக்கிறது. இவரது வீட்டு மாடியில் வேணுகோபால் என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு கடந்த சில ஆண்டுகளாக குடியிருந்து வந்துள்ளார். வேணுகோபால் கூலி தொழிலாளியாக வேலை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வேணுகோபாலுக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் கடந்த 6 மாதங்களாக வீட்டிலேயே முடங்கினார். இதனால் சீனிவாசனுக்கு மாதம் மாதம் தர வேண்டிய வாடகை பணத்தை கடந்த 6 மாதத்திற்கும் மேலாக வேணுகோபால் தரவில்லை. ஒரு கட்டத்தில் வீட்டின் உரிமையாளர் சீனிவாசன் வீட்டை காலி செய்யுமாறு வேணுகோபாலிடம் வற்புறுத்தி உள்ளார.

வக்கீல் நோட்டீஸ் : ஆனால் வாடகைக்கு குடியிருக்கும் வேணுகோபால் வாடகையை உடனே தராமல், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த வக்கீல் நோட்டீஸ் மூலமாக வீட்டின் உரிமையாளர் சீனிவாசனிடம் வாடகை செலுத்த காலஅவகாசம் வேணுகோபால் வாங்கி இருக்கிறார். ஆனாலும் சொன்னபடி மீண்டும் வேணுகோபால் வாடகை செலுத்தவில்லை.

படிக்கட்டு இடிப்பு: இதனால் ஆத்திரம் அடைந்த வீட்டின் உரிமையாளர் சீனிவாசன் மாடி வீட்டுக்கு செல்லும் படிக்கட்டை தரைமட்டமாக இடித்து காலிசெய்துவிட்டார். இதனால் வேணுகோபால் குடும்பத்தினர் மாடியில் இருந்து கீழே இறங்க முடியாத அளவிற்கு வழிகளை அனைத்தையும் உடைத்துவிட்டார். அத்துடன் மின் இணைப்பையும் துண்டித்ததுடன், தண்ணீர் இணைப்பும் கட் செய்தார்.

தீயணைப்பு துறை : இதனால் வாடகைக்கு குடியிருந்த வேணுகோபால் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறவும் முடியாமல், வீட்டில் வசிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் எப்படியாவது வீட்டை விட்டு வெளியேறினால் போதும் என்று நினைத்த வேணுகோபால் குடும்பத்தினர் 100க்கு அழைத்து போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் காஞ்சீபுரம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

பத்திரமாக மீட்பு: காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு கயிறு கட்டி வேணுகோபால் குடும்பத்தினர் பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர். பின்னர் வேணுகோபால் குடும்பத்தினரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.