ஐபிஎல், பிக் பேஷ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் உள்ளிட்ட பல்வேறு டி 20 லீக் தொடர்கள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற நிலையில் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளை தாண்டி 20 ஓவர் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிக்கென பிரத்யேக ரசிகர்கள் கூட்டம் இருந்த நிலையில் ஐந்து நாட்களும் டிவிக்கு முன்பே அமர்ந்து யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை இரண்டு இன்னிங்ஸ்களையும் விறுவிறுப்பாக கவனித்து கொண்டாடிய ரசிகர்கள் கூட்டமும் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல தற்போது எல்லாம் பொறுமையாக போகும் டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகளை விட சிக்ஸர்கள், ஃபோர்கள் என பறக்க விடும் டி20 போட்டிகள் தான் பெரும்பாலும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கிறது.
அதுவும் ஐபிஎல் தொடரில் ஒரே அணியில் இணைந்து ஆடும் வீரர்கள் வெவ்வேறு அணியில் ஆடும்போது அதற்கு மத்தியில் அனல் பறப்பதால் ரசிகர்களும் அதனை பெரிதாக விரும்பி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்றிருந்த டி20 உலக கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள், அதிக ஃபோர்கள், அதிக சதங்கள் என பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு இருந்த நிலையில் அதே வேகத்துடன் டி20 உலக கோப்பை போட்டியும் அதிரடிக்கு பஞ்சம் இல்லாமல் செல்லும் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அமெரிக்காவில் உள்ள பிட்ச் மற்றும் மைதானங்கள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கு மிக புதிதாக இருந்ததால் எந்த அணியினராலும் 150 ரன்கள் கடப்பதே சிரமமாக இருந்தது. இதுவரை மொத்தம் 38 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் ஏறக்குறைய 10 இன்னிங்சில் மட்டும்தான் 150 ரன்கள் கடந்திருந்தார்கள் என தெரிகிறது.
அந்த அளவுக்கு டி20 போட்டிகள் டெஸ்ட் போட்டியை போல அமெரிக்கா மைதானத்தில் தோன்றியிருந்ததால் ஐசிசி மீது கடும் விமர்சனங்களும் இதன் காரணமாக இருந்திருந்தது. ஒரு ஐசிசி தொடர் என வரும்போது இந்த அளவுக்கு தான் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்குமா என்றும் பேட்டிங்கிற்கு கொஞ்சம் கூட சாதகமாக இல்லாத பிட்ச்கள் எப்படி டி20 போட்டிகளுக்கு சரிவரும் என்றும் பல்வேறு கேள்விகளும் எழுந்திருந்தது.
அப்படி இருக்கையில் தான் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை நடைபெறாத ஒரு விஷயத்தை பற்றி தற்போது பார்க்கப் போகிறோம். 38 போட்டிகள் இதுவரை நடந்து முடிந்த நிலையில் எந்த ஒரு வீரரும் இதுவரை இந்த டி20 உலக கோப்பை தொடரில் சதம் அடிக்கவில்லை. ஐபிஎல் உள்ளிட்ட பல டி20 தொடர்களில் ஆடிய ஏராளமான அதிரடி வீரர்கள், இந்த டி20 உலக கோப்பையில் இருந்த போதிலும் ஒருமுறை கூட இதுவரை சதம் அடிக்காமல் இருந்து வருகின்றனர்.
இதற்கு பிட்ச் மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் இனி வரும் போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளதால் நிச்சயமாக ஒரு வீரர் முதல் சதத்தை பதிவு செய்வார். அதே போல முதல் சதத்தை எந்த வீரர்கள் அடிப்பார் என்பது பற்றி தங்களின் கணிப்புகளையும் பல ரசிகர்கள் இணையத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.