தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு வசூல் சாதனைப் படமாக மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் படையப்பா. கடந்த 1999-ல் வெளியான படையப்பா படம் அதற்குமுன் இந்தியன் படம் நிகழ்த்தியிருந்த வசூல் சாதனையை முறியடித்தது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா திரைப்படம் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
படம் திரையிட்ட இடமெல்லாம் வசூல்மழை பொழிந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்தின் வெற்றிக்கு மாபெரும் உதவியாக இருந்தது. பாட்ஷா, முத்து, படையப்பா என ஹாட்ரிக் மெகாஹிட் வெற்றிப் படங்களைக் கொடுத்து இந்திய சினிமாவின் வசூல் ஜாம்பவானாக உருவெடுத்தார் ரஜினி.
படையப்பா படத்தின் இணை தயாரிப்பாளராக பணியாற்றியவர் பி.எல்.தேனப்பன். தற்போது தயாரிப்பாளராகவும், நடிகராகவும் விளங்கும் பி.எல்.தேனப்பன் ஆரம்ப காலகட்டத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். படையப்பா படத்திலும் தயாரிப்பு நிர்வாகி இவரே. படையப்பா படம் வெளியான தருணத்தில் ஒருமுறை ரஜினி இவரை அழைத்திருக்கிறார். வரும் போது வரவு செலவு கணக்குகள், சம்பளக் கணக்குகள் அனைத்தையும் கொண்டு வருமாறு கூறியிருக்கிறார்.
ரஜினி சொன்னது போல் மறுநாள் காலை அனைத்து வரவு, செலவு கணக்குகளுடன் பி.எல்.தேனப்பன் ரஜினியிடம் செல்ல, அப்போது அவர் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்று பார்த்துவிட்டு இவர்கள் அனைவருக்கும் இன்னொரு மடங்கு சம்பளத்தைக் கொடுங்கள் என பணத்தினைக் கொடுத்திருக்கிறார் ரஜினி.
பலத்த காயத்தால் சிதைந்த முகம்.. இனி இந்த மூஞ்சிக்கு சினிமாவா? மாற்றிய பாரதிராஜா.. சாதித்த ஜனகராஜ்..
ஏனெனில் தயாரிப்பு தரப்பில் சொன்ன பட்ஜெட்டைக் காட்டிலும் பல மடங்கு குறைவாகவே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும், தேனப்பனும் படத்தினை முடித்துக் கொடுத்திருக்கின்றனர். இதனால் படத்தயாரிப்பு நிறுவனமும், ரஜினியும் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். மேலும் படமும் நல்ல விலைக்கு விற்று பல ஏரியாக்களில் டிக்கெட் வசூல் மழை பொழிந்தது.
இதனால் படத்தில் பணியாற்றி நடிகர்கள், டெக்னீசியன்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்னொரு மடங்கு சம்பளம் கொடுக்கப்பட்டது. ரஜினி இதனை ஒரே நாளில் அனைவருக்கும் பட்டுவாடா செய்து விடுங்கள் என்று கூற அன்றே அனைவருக்கும் நேரில் சென்று கொடுத்திருக்கிறார் பி.எல்.தேனப்பன்.
மேலும் இப்படத்தில் பணியாற்றி எடிட்டிருக்கு புதிதாக வீடே கட்டிக் கொடுத்திருக்கிறார். ஒரே ஒரு காட்சியில் ஒரு நாள் ஷுட்டிங்கில் வந்து சென்ற மன்சூர் அலிகான் அப்போது பெற்ற சம்பளம் ரூ.75,000 . அவருக்கும் அதை விட கூடுதலாக ஒருலட்சம் தரப்பட்டிருக்கிறது.
மேலும் ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் கூடுதல் சம்பளம் தரப்பட்டது. முத்து படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் படையப்பாவில் ஒரு பைசா கூட வாங்காமல் பணியாற்றிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.எல். தேனப்பன் ஆகியோரை மறுநாள் வரச்சொல்லி ரஜினி அவர்களும் நினைத்துப் பார்த்திராத தொகையை சம்பளமாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல குடும்பங்களை வாழ வைப்பதால் தான் ரஜினியை ஒரு நடிகராக மட்டுமின்றி, ஒரு படத்தில் நடித்தால் ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வாழ வைக்கும் ஒரு தொழிலதிபராகவும் சினிமாதுறை அவரை பார்க்கிறது. அதனால் ரஜினிக்கு இந்த மாஸ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு பிள்ளையார் சுழி போட்ட படம் பாட்ஷா. அறுவடை செய்த படம் படையப்பா.