படித்து முடித்தபின் மூன்று வகையான கனவுகளுடன் நம்மில் பலர் வெளியே வருவோம். எப்படியாவது ஒரு நல்ல கோச்சிங் சென்டர் போய் படித்து அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பவர்கள் ஒருவகை. சொந்தத் தொழில் செய்து வாழ்வில் முன்னுக்கு வரவேண்டும் என்பவர்கள் இரண்டாவது வகை. முன்றாவது ஒரு பெரிய நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்துடன் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பவர்கள். இப்படி மூன்று தரப்பட்ட கனவுகளுடன் ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக் கல்வியை முடித்து வெளியேறுகின்றனர்.
ஆனால் இவர்கள் நினைத்தபடி வேலை கிடைக்கிறதா என்றால் அது குதிரைக் கொம்புதான். அப்போது தான் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர ஆரம்பிப்பார்கள். கடுமையான உழைப்பும், புத்திசாலித்தனமும் வேண்டும் என்பதை வாழ்வில் உணர்வர். எனவே தங்களது இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்து வெற்றி பெறுவர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் அந்தக் கனவுகளைத் துரத்திப் பிடிக்க முயற்சி செய்யாமல் கிடைத்தது போதும் என்ற மனநிலையில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிப்பர்.
இவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக ஒரு அதிசய சம்பவம் திருப்பூரில் நடைபெற்றுள்ளது. ஆம்..! திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவத்தில் பணியாற்றும் மூன்று பெண் ஊழியர்கள் TNPSC Group 1 தேர்வெழுதி தற்போது தேர்ச்சி பெற்று அடுத்த பணியிடத்திற்கு முன்னேறியுள்ளனர். அண்மையில் பழங்குடியின பெண் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று மிக இளம் வயது நீதிபதியாக தமிழ்நாட்டில் உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்த மூன்று சிங்கப் பெண்களும் ஏற்கனவே அரசுத் துறைகளின் முக்கியப் பொறுப்பில் பணிபுரிந்து வருகின்றனர்.
அஜீத் பாணியில் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த கன்னட நடிகர் சிவராஜ் குமார்.
முதலாமவர் சுபாஷினி. 26 வயதான இந்த ஈரோட்டுப் பெண் பொறியியல் படித்து முடித்து விட்டு அரசுப் பணியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஏற்கனவே வெற்றி பெற்று 2020-ல் கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது குரூப் 1-ல் தேர்ச்சி பெற்று கூட்டுறவுத் துறையிலேயே இணை பதிவாளராகப் பொறுப்பேற்க உள்ளார்.
இரண்டாமவர் திருப்பூரைச் சேர்ந்த இந்திரா பிரியதர்ஷினி. 28 வயதான இவர் வேளாண் பட்டதாரி. மடத்துக்குளத்தில் வேளாண் அதிகரியாகப் பணியாற்றி தற்போது திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் குரூப் 1 தேர்வில் 35-ம் இடம் பெற்று வணிக வரித்துறையில் உதவி ஆணையராகப் பொறுப்பேற்க உள்ளார்.
மூன்றாமவர் நித்யா. 26 வயதாகும் இவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த வேளாண் பட்டதாரி. குரூப் 4 தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்று இளநிலை உதவியாளராக திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது குரூப்1 தேர்வில் இவர் பெற்ற இடம் 10. இவர் சப் கலக்டராகப் பதவி ஏற்க உள்ளார்.
முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கு உதாரணமாக தங்களது பணிச்சுமையையும் பொருட்படுத்தாது அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்று முயன்று படித்து இன்று உயர் பதவிகளை அடைந்த இந்தச் சகோதரிகளுக்கு நம்முடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.