பொதுவாக கிராமப்புறங்களில் யாராவது தப்பு செய்து விட்டால் மூதேவி மூதேவின்னு திட்டுவோம். அப்படி மூதேவின்னாலே அந்த வார்த்தையை நாம் திட்ட மட்டும் தான் பயன்படுத்துவோம்.. ஆனா அவங்க எவ்வளவு முக்கியமானவள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். வாங்க பார்க்கலாம்.
தாம் எவ்வளவு தான் தான தர்மங்கள் செய்தாலும் நமது முன்னோர்கள் செய்த தர்மங்களும் அதன் பலன்களும் நம்மில் பலர் இன்று செல்வந்தர்களாக வாழக் காரணமாகின்றன. மகாலெட்சுமி அருள் கிட்டிய இவர்களில் கூட பலரும் நிம்மதியே இல்லாமல் தவித்து வருவதைக் காணலாம். இது ஏன்; என்று பார்ப்போமா…
இன்று யாரையாவது பிடிக்காவிட்டால், அவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால் மூதேவி என்று திட்டுவதைக் காணலாம். இதற்கு என்ன காரணம் என்றால் மூதேவி தூக்கத்தைத் தருபவள். அந்தத் தூக்கத்தைத் தூங்க வேண்டிய நேரத்தில் சரிவர தூங்காமல் அந்த நேரத்திலும் உழைத்து செல்வத்தை சேர்த்து வருகின்றனர்.
இதனால் அவர்களது உடலும் மனமும் பாதிக்கப்படுகிறது. அதனால் பணம் பணம் என்று அலைபவர்கள் தூக்கம் வந்தால் மூதேவி என்று திட்டுகின்றனர்.
மூத்த தேவி தான் மூதேவி. அக்கால இலக்கியங்களில் தவ்வை என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இரவில் மூதேவியின் அம்சமான தூக்கத்தை அனுபவித்தால் தான் பகலில் ஸ்ரீதேவியால் சந்தோஷம் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

இல்லாவிட்டால் அந்த மூதேவியே எல்லாவற்றையும் வரவிடாமல் தடுத்துவிடுவாள். மூதேவியை யாராலும் ஜெயிக்க முடியாது. அதற்கென தனியாக இறையருளும், மனப்பக்குவமும் வேண்டும். தூக்கம் உலகில் இறைவனால் அளிக்கப்பட்ட சொர்க்கம்.
இது இல்லாமல் உலகில் பாதி பேர் வேதனைப்படுகிறார்கள் என்பதே உண்மை. மக்கள் இந்தத் தவறை செய்துவிட்டு லட்சுமியின் அருளுக்காகப் போய் நிற்கிறார்கள். கஷ்டப்பட்டு வாங்கக்கூடியது தான் லட்சுமியின் அருள். ஆனால் கஷ்டமே படாமல் இயற்கையாக இலவசமாக வாங்கக்கூடியது மூதேவியின் அருள். இதற்காக நாம் எந்த முயற்சியும் செய்ய வேண்டிய தேவையே இல்லை.
பெரும்பாலும் மக்களுக்கு இலவசங்கள் என்றாலே அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஆனால் அது எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. காற்று, வெப்பம், பூமி, ஆகாயம், தண்ணீர், தூக்கம் இவை எல்லாம் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றில் குறிப்பாக மக்கள் மூதேவி என்றாலே கடுப்பாகி விடுவார்கள்.
வெளிச்சத்திற்கு சூரியன், எதிர்ப்புக்கான அடையாளம் இருள் அதாவது சனி என்றும் தவறான சில கருத்துகளைக் கொண்டு இருக்கின்றனர். மூதேவியை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சின்ன பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒருநாள் இரவு தூங்காமல் இருந்து பாருங்கள். மூதேவி எவ்வளவு முக்கியமானவள் என்பது தெரியவரும்.
அவளது அருமையை இழப்பதினால் எவ்வளவு செல்வம் இருந்தும் மனநிம்மதி இல்லாமல் தூக்கத்தைத் தொலைக்கின்றனர்.
இதையும் படிங்க… கொடி மரம் உருவான கதை…. தர்மருக்கு பாடம் கற்பித்த கிருஷ்ணர்..!
மூதேவியின் அருள் இருந்தால் உடல் உறுப்புகள் காக்கப்படும். மூளை சுறுசுறுப்பாகும். மனம் பலம் பெறும். கோபம் தடைபடும். நிதானம் பெருகும். உடல் உஷ்ணம் குறையும். கண்களுக்கும் பலம் கிடைக்கும். சிந்திக்கும் ஆற்றல் பெருகும். உடலின் சக்கரங்கள் சீராகும்.
மர்ம உறுப்புகள் பலம் பெறும். இப்படி அத்தனை உடல் உறுப்புகளுக்கும் தூக்கம் தான் அருமருந்து. அதனால் தான் அது மறுநாளுக்குத் தேவையான சக்தியைப் பெறுகிறது. எனவே பகலில் தூங்கினால் தரித்திரம். இரவில் நேரத்துடன் தூங்கி மறுநாள் அதிகாலை எழுந்து லட்சுமியின் அருளைப் பெறுவோம்.
பகலில் தூங்கும்போது கர்ம பாவத்துடன் தூக்கமும் சேர்வதால் மூதேவியை விரட்டு என்கிறார்கள். இதனால் உழைப்பு பாதிக்கும் என்கிறார்கள். தூக்கம் இல்லாதவர்கள் தான் வெறி கொண்டவர்களாகவும், நோயாளிகளாகவும், குறுக்கு வழியில் சந்தோஷத்தைத் தேடுபவர்களாகவும், தனக்கான துன்பத்தைத் தானே தேடுபவனாகவும் மாறுகிறான். அதனால் டிவி, நெட், மொபைல் ஆகியவற்றுக்கு விடை கொடுத்துவிட்டு இரவில் சீக்கிரமாக தூங்குங்கள். காலையில் சீக்கிரமாகவே எழுந்து விடுங்கள்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



